• உறுதியான அஸ்திபாரம்


    NarrowPath

    ஐரோப்பா தேசமொன்றிலே மிகப்பெரிய கட்டிடம் ஒன்று நவ நாகரீகமான முறையில் கட்டப்பட்டு வெகு நேர்த்தியாக காணப்பட்டடது. ஆனால் அது யாருக்கும் உபயோகமில்லாமல் அரசாங்கத்தினால் முத்திரை போடப்பட்டிருந்தது. காரணமென்னமென்றால் அவ்வீட்டைக் கட்டி எழுப்ப ஆரம்பிக்கும்போது ஒருவர் வாங்கின லஞ்சத்தின் விளைவாக மிகவும் மோசமாக அஸ்திபாரம் போட்டு விட்டார்கள். அஸ்திபாரம் உறுதியானதா என்று கவனிக்காத எஞ்ஜினியர்கள் அதின் மேல் மிக வேகமாக கட்டிடத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே கட்டிடம் ஆட்டம் கண்டது. இதற்கான காரணம் அதை பொறுப்பெடுத்து செய்தவர்களுக்கு உத்தம குணமில்லை. தங்களது உண்மைத் தன்மையை லஞ்சத்திற்கு விற்றுவிட்டார்கள். எவ்வளவு பணம் செலவழித்து என்ன பயன்? எல்லாம் வீணானது.
    அதேப் போல சரியான குடும்ப உறவுகளைக் கட்டி எழுப்புவதற்கு சரியான அஸ்திபாரம் தேவை. ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் அஸ்திபாரம் கொலோசேயர் 3:18-20 வரை உள்ள வசனங்களில் அடங்கியுள்ளது. அவைகள் கணவன் மனைவியிடம் அன்புகூறுவதும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படிவதும், பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிவதும் மற்றும் பெற்றோர் பிள்ளைகளை கோபமூட்டாதிருப்பதும் ஆகும்.
    குடும்பத் தலைவன் தேவையில்லாத காரியத்திற்கு அதிகமாய் கோப்படுவது, ஆணவமாய் நடந்துக் கொள்வது, அளவுக்கதிகமாய் அதிகாரம் செலுத்துவது போன்றவை குடும்பக் கட்டுமானத்தை கெடுக்கும். பணத்தை குடியிலும், வெறியிலும், புகைப்பதிலும், சீட்டாட்டத்திலும், தேவையற்ற நண்பர்களை சேர்த்துக் கொண்டு செலவழிப்பதிலும் இருந்தால் அந்தக் குடும்பம் எப்படி முன்னுக்கு வர முடியும்? கணவன் மற்ற பெண்களிடத்தில் அல்ல, மனைவியினிடத்தில் அன்புகூரும்படியாக வேதம் நமக்கு போதிக்கிறது.
    அதுப்போல மனைவி குடும்பத்தின் அதிகாரி போல நடக்கிற வீடுகள் உண்டு. குறிப்பாக கணவனை விட கூடுதல் சம்பளம் வாங்கும்போது அப்பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம். வேதத்தின்படி கணவனே குடும்பத்தின் தலையாக இருக்க வேண்டும். கணவனுக்கு கீழ்ப்படிந்தவளாக மனைவி காணப்பட வேண்டும். நான் வைத்ததுதான் சட்டம் என்றும், பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் அறிமுகமில்லாத ஆண்களோடு மணிக்கணக்கில் பேசுவதும் குடும்ப உறவை முறிக்கிற காரியங்கள். கணவனுக்கு விருப்பமில்லாத காரியங்களில் மனைவி ஒருபோதும் ஈடுபடக்கூடாது. இல்லாத பட்சத்தில் குடும்பத்தின் அஸ்திபாரம் ஆட்டம் காணும்.
    அதைப் போல பிள்ளைகளை கீழ்ப்படிய சிறுவயது முதல் பயிற்றுவிக்க வேண்டும். தேவையானால் வசனத்தின்படி பிரம்பையும் பயன்படுத்தக்கூடிய உறுதி பெற்றோருக்கு தேவை. மற்றவாகள் பிள்ளைகளை குறித்து குறைகளை சொல்லும்போது, என் பிள்ளை அப்படித்தான் இருப்பான், உன் பிள்ளைகளை நீ பார்த்துக் கொள் என்கிற அநாவசியமான வார்த்தைகளை கொட்டக்கூடாது. அந்த தவறு பிள்ளையிடம் இருக்கிறதா என்றுப் பார்த்து அதை திருத்த முயற்சிக்க வேண்டும். ஏதோ நம் பிள்ளைகள் வானத்தில் இருந்து வந்த தேவதூதர்களை போல நினைத்து அவர்களை சத்தம் போடவே பயப்படுகிற பெற்றோர் இருக்கிற வரை பிள்ளைகள் கெட்டுப் போக சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. பிள்ளைகளை கண்டிக்கிற அதே நேரத்தில் அன்பும் செலுத்த வேண்டும்.
    பிரியமானவர்களே, வேத வசனத்தின்படி அமைக்கப்படும் குடும்பம் உறுதியாக அஸ்திபாரம் போடப்பட்ட வீட்டைப் போன்றது. அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வரலாம். ஆனால் வீடோ அசையாது. கணவன், மனைவி, பிள்ளைகள் இவர்களுக்கு தேவன் கொடுக்கும் இந்த எளிய ஆலோசகைளை கைக்கொள்ளுவோம்.
    வேத வசனத்தினால் அஸ்திபாரம் போடப்பட்ட, கிறிஸ்துவையே நம் குடும்பத்தின் அஸ்திபாரமாக வைத்துக் கட்டுவோம். அந்த வீடு அசையாததாக, உறுதியானதாக என்றென்றும் நிலைத்திருக்கிறதாக இருக்கும். ஆமென் அல்லேலூயா!

    வேத வசனம்:
    தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது. – 2 தீமோத்தேயு 2:19

    Original Source From: anudhinamanna.net

    Related Post

    Categories: சிந்திக்க சில விசயங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    eight × = 48

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>