-
சத்துருவுக்கு எதிர்த்து நில்லுங்கள்
ஒரு சிறுவனும் அவனது அக்காவும் தங்களது விடுமுறையை தங்கள் தாத்தா பாட்டியோடு கழிப்பதற்காக, அவர்கள் இருந்த கிராமத்திற்கு போனார்கள். அவர்களது தாத்தா, பக்கத்திலிருந்த காட்டிற்குள் சிறுவனான ஜானை தன்னோடு கூட்டிக்கொண்டுப்போய், அவனுக்கு கவண்கல் (catapult) எப்படி அடிப்பது என்று கற்றுக் கொடுத்தார். அவன் அங்கிருந்த எல்லா சிறு சிறு பறவைகள், மிருகங்கள் மேலும் குறி வைத்து அடித்துப் பார்த்தான். ஒன்றும், சிக்கவில்லை. அவன், சரியாக குறி வைக்காததால், அவை மாட்டவில்லை. மிகவும் சோர்வுடன் அவன் வீடு நோக்கி வந்தபோது, அவனது பாட்டி அன்பாக வளர்த்து வந்த ஒரு வாத்து அவன் கண்களில் பட்டது. இதையாவது அடித்துப் பார்ப்போம் என்று எண்ணி, அந்த வாத்தை குறி வைத்து கல்லை எறிந்தான். அது சரியாகப் போய்ப்பட்டு, அந்த வாத்து,செத்து விழுந்தது. அவன் வெலவெலத்துப் போனான். என்ன செய்வது என்று தெரியவில்லை. சுற்றி முற்றும் பார்த்து, பக்கத்தில் குழி பறித்து அந்த வாத்தை அவன் புதைத்துப் போட்டான். அவன் யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தான். ஆனால் அதை அவனது அக்கா பார்த்து விட்டாள். ஆனால் அவள் அவனிடம், எதையும் கேட்கவில்லை.
.
மறுநாள், தாத்தா வேட்டைக்கு போகும்போது பிள்ளைகளை தன்னோடு வரும்படி, அழைத்தார். அப்போது, பாட்டியார் ‘ஜானை மட்டும் கூட்டிக் கொண்டு போங்கள், மகள் என்னோடு இருக்கட்டும்’ என்றுக் கூறினார்கள். அப்போது அக்கா ஜானிடம் வந்து, இரகசியமாக, ‘வாத்து தெரியுமில்ல’ என்று அவனை மிரட்டிவிட்டு, பாட்டியாரிடம், ‘பாட்டி இன்று ஜான் என்னுடைய வேலைகளை செய்வான். நான் தாத்தாவுடன் போகிறேன்’ என்று கூறிவிட்டு தாத்தாவுடன் சென்றாள். அப்படியே இரண்டு வாரங்கள், அவள் தொடர்ந்து, அவனை தனக்கு பதிலாக அவனை வைத்து வேலை வாங்கினாள். ஒரு நாள், ஜான், ‘நான் போய் பாட்டியிடம் நடந்ததை சொல்லி விடுகிறேன். நான் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாதபடி இந்த அக்கா என்னை எப்போதும் மிரட்டிக் கொண்டிருக்கிறாள். இவள் பண்ணுகிறது அநியாயம்’ என்று நினைத்தவனாக, பாட்டியிடம் சென்று, ‘பாட்டி என்னை மன்னித்து விடுங்கள்’, என்று நடந்ததைக் கூறினான். அப்போது பாட்டி சொன்னார்கள், ‘மகனே, நீ அன்று செய்த காரியத்தை நானும் பார்த்தேன். ஆனால் நான் பார்த்ததை நீ கவனிக்கவில்லை. நீயாக வந்து என்னிடம் சொல்லி மன்னிப்புக் கேட்பாய் என்று இத்தனை நாட்கள் காத்திருந்தேன். ஆனால் நீ உன் அக்காவிற்கு அடிமையாக இத்தனை நாள், அவளுக்கு வேலை செய்துக் கொடுத்துக் கொண்டிருந்தாயே!’ என்று அன்போடு கூறினார்கள். அவன், ஏன் நாம் முன்பே பாட்டியிடம் வந்துச் சொல்லவில்லை என்று வருத்தப்பட்டான்.
.
நம்மில் அநேகர் நாம் செய்த தவற்றை மறைத்து வைத்து, கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்காமல், ஐயோ நான் தவறு செய்து விட்டேனே! கர்த்தர் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று குற்ற உணர்ச்சியிலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சத்துரு அதை அறிந்து எப்போதும் நம்முடைய இருதயத்தில், நீ பாவம செய்தவன் தானே, செய்தவள் தானே, நீயா போய் ஜெபிக்கிறாய்? உன் ஜெபம் ஏற்றுக் கொள்ள மாட்டாது என்று நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். நாமும் அவன் சொல்லுகிற பொய்யை எல்லாம் உண்மை என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
.
பவுல் அப்போஸ்தலன் சொல்கிறதுப்போல ‘ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்| என்று, ஒரு முறை அறிக்கை செய்த பாவங்களையும், நடந்தவற்றையும் மறந்து, முன்னானவைகளை நாடி, இலக்கை நோக்கி உண்மையோடு தொடருவோம். ‘நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும எழுந்தரிப்பான்’ என்று வேதம் கூறுகிறது. ஆகவே நாம் விழுந்த இடத்திலேயே இருந்து, ‘ஐயோ நான் விழுந்துவிட்டேனே’ என்று புலம்பிக் கொண்டிருக்காமல், தேவ பெலத்தால் திரும்ப எழுந்தரிப்போம். கர்த்தருக்கென்று வாழ்வோம். பழையதை மறந்து, பந்தய பொருளை பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுவோம். ஆமென் அல்லேலூயா!
.
வேத வசனம்:
—————–கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். – (பிலிப்பியர் 3: 12-14).
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதிமொழிகள் 28:13)
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (I யோவான் 1:9)
.
Original Source From: anudhinamanna.net
எதிர்பாராத நேரத்தில் வருவார் ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்று
சத்துருவுக்கு எதிர்த்து நில்லுங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives