• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 48

    படுத்திருந்த இடத்தில் இருந்து எழும்பி எங்கயாவது போய் விடலாம் என்று கூட நினைத்தாள். பத்து நிமிஷங்களுக்கு முன் இருந்த சந்தோசமும், உற்சாகமும் கொஞ்சம் கூட இப்போது இல்லை என்பது அவளுக்கும் புரிந்தது…..

    இன்னும் எத்தனை நேரம் இந்த வீட்டில இருக்க வேண்டியது இருக்கு…..மனதில் எண்ணங்கள் ஓடியது. கொஞ்சம் நேரத்திற்கு முன் கேட்ட காரியங்கள் அனைத்தும் நானா கற்பனையா யோசித்த காரியமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்….மனதினில் நினைத்து கொண்டாள். ஆனால் அது மாற்ற முடியாது என்பதை போல மீண்டும் பேச்சுக் குரல் கேட்க ஆரம்பிக்கவும் ப்ளீஸ்….இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க…..என்று கத்த தோணியது அவளுக்கு.

    நம்ம பொண்ணு பிறந்த சமயத்தில் எனக்கு இருந்த குணம் வேறு. ஆனா இப்ப நம்ம இயேசப்பாக்குள்ள வந்திட்டேனே….அப்படி இருக்கும் போது என் பொண்ணு என்னை விட்டு ஏன் இன்னும் விலகி வாழணும்……ஜேம்ஸ் அப்பா கேட்ட போது

    புரியாம பேசாதீங்க….இப்ப அவ தன்னோட இருக்கிறவங்களை அம்மா, அப்பான்னு சொல்லி சந்தோசமா வாழ்ந்திட்டு இருக்கா அப்படி இருக்கும் போது தீடீர்னு நாம போய் நின்னு அம்மா, அப்பான்னு சொன்னா….அவ சின்ன பொண்ணுங்க….அவளை ஏன் கஷ்டபடுத்த நினைக்கிறீங்க…..ஜேம்ஸ் அம்மா சொன்ன போது

    அப்ப நான் பழைய காலத்தில செய்த எல்லா தப்புக்காகவும் சேர்த்து வைச்சி உங்க இயேசப்பா பழி வாங்கிட்டாருன்னு தான அர்த்தம்…..கோபத்துடன் அவர் கேட்ட போது

    இன்னும் ஏன் உங்களை நேசிக்கிற தேவனை காயப்படுத்துறீங்க. உங்க முரடான குணத்தில  நீங்க வாழ்ந்திட்டு இருக்கும் போது உங்களுக்கு இந்த உலகத்தில் இருந்த எந்த உறவுகளையும் தெரியலை…..அதன் மதிப்புகளையும் அப்ப புரிஞ்சுக்காம இருந்தீங்க…….ஆனா இப்ப கூடவா உங்களுக்கு அந்த கல்லான இருதயம் போகலை……ஜேம்ஸ் சொன்ன போது

    தயவு செய்து அப்படி பேசாத ஷீலா. நான் ஒரு சாதரணமான ஆளா….இல்லை ரொம்பவே என் மனம் போன போக்கில் தான் வாழ்ந்திட்டு இருந்தேன்…அப்ப எனக்கு இயேசப்பாவும் தெரியாது….சந்தோசத்தையும் தெரியாது….ஆனா நீ என் வாழ்கையில் வந்த பிறகு எத்தனையோ காரியங்களை நான் தெரிஞ்சிக்கிறேன்….அதுல ரொம்பவே உன்னதமானது என்னை படைத்த தேவனை தெரிந்து கொண்டது….ஆனா என் வாழ்கையில் எல்லா காரியங்களையும் கத்து கொடுத்த நீயே என்னை ஒரு கல்லான மனுஷன் சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்குது……. அவர் உடைந்த குரலில் சொன்ன போது

    ஆனா இன்னும் நீங்க நிலைமையை புரிந்து கொள்ளாம இருக்கும் போது என்னால என்ன செய்ய முடியும் சொல்லுங்க…அவ பத்து வருசங்களா ஒருத்தங்களை தன் அம்மா, அப்பாவா நினைச்சி வாழ்ந்திட்டு இருக்கும் போது நாம போய் நாங்க தான் உங்க அம்மா, அப்பான்னு சொன்னா….அந்த சின்ன இருதயம் என்ன பாடுபடும்னு உங்களால புரிஞ்சுக்க முடியலையே….. அவளை நம்ம தேவன் தன் பிள்ளையா எடுத்து நடத்திட்டு இருக்காங்க….. நாம அவளுடைய அம்மா, அப்பாகிட்ட இப்ப கூட போய் நாங்க எங்க பொண்ணை கூட்டிட்டு போறோம்னு சொன்னா கண்டிப்பா சந்தோசமா அவளை அனுப்பி வைச்சிருவாங்க….ஆனா நம்ம பொண்ணு மனசு, இது வரைக்கும் அவளை ஒரு இளவரசி மாதிரி பார்த்து கொண்ட அவங்க மனசு….எல்லாம் உடைந்து சிதறி போயிருமே….இதுவா நம்ம இயேசப்பா நாம வாழுறதுக்கு கத்து கொடுத்த பாடம்……அழுகையுடன் ஜேம்ஸ் அம்மா சொன்ன போது

    ஆனா ஒவ்வொரு நாளும் என் பொண்ணை பத்தி நினைச்சி உருகிட்ட என் அழுகையை கூட நம்ம இயேசப்பா கேட்டுட்டு தான இருக்காங்க….அப்ப என் இருதயம் மட்டும் வேதனைப்படாதா???? அவர் கேட்ட போது

    உண்மையில் ஜேம்ஸ் அம்மாக்கு கூட ஆச்சரியம்….ஆனா இது வரைக்கும் நீங்க ஒரு நாள் கூட என்கிட்டே நம்ம பொண்ணை பத்தி சொன்னதே இல்லை…அவர் கேட்ட போது

    என்னிக்கி நான் என்னுடைய தப்புகளுக்கு வருந்தி நம்ம இயேசப்பாகிட்ட மன்னிப்பு கேட்டேனோ, அந்த நாள்ல இருந்து நான் என் பொண்ணை பத்தி நம்ம இயேசப்பாகிட்ட கேட்டுட்டேதான இருக்கேன்….நீ என்கிட்டே வெளிப்படையா சொல்லி புலம்புற….நான் என் மனசில வைச்சி புலம்புறேன்….நம்ம பொண்ணு வயசில எந்த பொண்ணையும் பார்த்தாலும் நான் என்னிக்கி என் பொண்ணை கண் குளிர பார்க்க போறேன்….ன்னு மனசு நொறுங்கும் தெரியுமா……அவர் சொல்லி கொண்டே போன போது

    என்னை இங்கயவே உட்கார வைச்சிருவாரா இவர்…..மனதினில் கேட்டு கொண்டாள்.

    இருந்த இளமை திருக்கில் செய்ய கூடாத செயல்களை எல்லாம் செஞ்சி, வாழ்ந்திட்டு இருந்த போது நீ என் வாழ்கையில் வந்ததே முதலில் எனக்கு பாரமா தோணுச்சு…இனி மனைவின்னு ஒருத்தி வந்ததால என் வாழ்க்கை சுதந்திரம் பறி போச்சுன்னு நினைச்சிட்டு இருக்கும் போதே நம்ம ஜேம்ஸ் வந்தான்….சின்ன வயசில அவனுக்கு உடம்பு சரியில்லாம போய் எத்தனை தடவை நாம ஹாஸ்பிடல், வீடுன்னு அலைஞ்சிருக்கோம். அப்ப நம்ம பொண்ணு பிறந்ததால இவளுக்கும் சேர்த்தும் என்னால கஷ்டப்பட முடியாதுன்னு சொல்லித்தான் அவளை வேண்டாம்னு சொன்னேன்…உங்க அம்மா, அப்பா வேறு வழி தெரியாம நம்ம பொண்ணை இப்ப அவளை வளர்த்திட்டு இருக்கிற அவ அம்மா, அப்பாகிட்ட கொடுத்தாங்க….அப்ப இருந்த என் மன நிலையில் இனிமே னாச்சும் என் வாழ்கையில் சுதந்தரமா வாழணும்னு ஆசையில நாங்க எங்க பொண்ணை யோசித்து கூட பார்க்க மாட்டோம்ன்னு தேவையில்லாத வாக்கு வேறு நான் கொடுத்தேன்….ஆனா ஒவ்வொரு நாளும் நான் அதை குறித்து நினைச்சி பார்த்து எவ்வளவு வேதனைப்பட்டிருக்கேன் தெரியுமா ஷீலா??? அவர் சொன்ன போது

    இவளுக்கு கூட மனம் கஷ்டமாய் இருந்தது. ஒரு மனிதனை பாவம் எந்த அளவு அவன் வாழ்க்கையையே சிதறடித்து விடுகிறது???? உண்மையில் ஆச்சரியமாய் நினைத்தாள்.

    ஏன் இயேசப்பா….உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கணும்ன்னு சொல்லுறாங்களே….அது இதை குறித்து தான் சொல்லுறாங்களா அப்பா….ஆனா என் இயேசப்பா அன்புக்குள் அவங்க வந்தாலும் கூடவா அவங்க என்றும் மன வேதனையை, தன் பழைய வாழ்கையில் செய்த தப்பை நினைச்சே வாழணும்னு கட்டாயம் இருக்கா என்ன??? அவள் தன் தேவனிடம் கேட்டாள்.

    இப்ப என்னாலயும் கை நிறைய சம்பாதிக்க முடியுது…என்னால என் மனைவியையும், என் பையனையும் சந்தோசமா என் இயேசப்பா கிருபையில நல்ல படியா பார்த்து கொள்ளும் போது, என் இயேசப்பா எனக்கு கொடுத்த என் பொண்ணை நான் நல்லா பார்த்து கொள்ள மாட்டேனா??? அவர் கேட்ட போது

    இப்ப நல்லா பார்த்து கொள்ளுறதை பத்தி பேச்சே இல்லையே….அவ இது வரை வாழ்ந்த இடம்தான் இனிமேலும் அவளுக்கு சரியான இடம்ன்னு நம்ம இயேசப்பா முடிவு பண்ணி இருக்கும் போது அதை மாத்துறதுக்கு நாம யார்ங்க???ஜேம்ஸ் அம்மா சொன்ன போது சிறிது நேரம் எந்த சத்தமும் இல்லை….

    இன்னும் நீங்க ஏன் நம்ம பொண்ணை பிரிஞ்சி வாழுறதை இயேசப்பா கொடுத்த தண்டனையா நினைக்கிறீங்க. அது தண்டனை கிடையாதுங்க….நம்மளை நேசிக்கிற நம்ம தேவனுக்கு கொடுத்த பரிசா இருக்கட்டும். அவ நம்ம பக்கத்தில இருந்தாலும் அவளை இயேசப்பா கையில கொடுத்துட்டு அவர் அவ வாழ்கையில் நடத்துற அழகான காரியங்களை பார்த்து மட்டும் தான் ரசிக்க வேண்டியது இருக்கும்….என்ன இப்ப கொஞ்சம் வித்தியாசம் அவளை பக்கத்தில் பார்க்க முடியாது…ஆனாலும் அவ வாழ்கையில் நம்ம தேவன் நடத்தும் அழகான காரியங்களை நமக்கு இப்பவும் சொல்லிட்டேதான இருக்காங்க….. நாம நம்ம தேவனுக்கு அவளை ஒப்பு கொடுத்திருக்கோம்……அவர் நாமத்துக்கு மகிமையா நாம எதை கொடுத்தாலும் நமக்கு இயேசப்பா திரும்ப கொடுப்பேன் சொல்லி இருக்காங்களே….அப்ப நம்ம பொண்ணு மாதிரி நிறைய பெண் குழந்தை வாழ்கையில் நம்ம இயேசப்பா நடத்துற மாற்றங்களை நாம கண்ணார கண்டு அவரை புகழ்றது அப்ப நிச்சயமான காரியம் ஆச்சே….ஜேம்ஸ் அம்மா சொல்லி கொண்டிருந்த போது அவள் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது…..

    உறவுகள் எத்தனை நெருக்கமான காரியம்னு சொல்லி நிறைய பேரு புலம்பிட்டு இருக்காங்க….ஆனா அந்த காரியத்தை கூட இயேசப்பா கையில் கொடுக்கும் போது என் தேவன் அதை எத்தனைமடங்கு அழகான சந்தோசமா மாத்தி தராங்க. அதுனாலதான் நம்ம இயேசப்பா மாற்கு புத்தகத்தில் இப்படி சொல்லி இருக்காங்களா??

    என்னிமித்தமாகவும், சுவிசேஷகத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்

    இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்….

    விளங்கி கொண்ட சத்தியம் அவளை உண்மையில் சந்தோசப்படுத்தாமல் வேதனைப்படுத்தியது. ஏன்….மனதினில் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில் உண்மையில் அதிர்ச்சியை கொடுத்தது. நானா….அவள் மீண்டும் தன்னையே கேட்டுக் கொண்டாள்.

    கண்ணீர் வேறு எட்டி பார்த்தது அவளுக்கு….அதை விட அவள் கேட்ட அடுத்த வார்த்தை உண்மையில் அவளை உடைத்து விட்டது…..

    என் இயேசப்பா சித்தம் இதுவா இருந்தா நான் முழுமையா அதுக்கு கீழ்படியுறேன். ஒரு அப்பா நிலையில இருந்து நான் என் பொண்ணுக்கு செய்ய முடியாத அந்த கடமையை என் இயேசப்பா கொடுக்கிற திரளான பிள்ளைகளுக்கு முழு மனசோடு செய்ய போறேன்…..எத்தனையோ விதமான பாடுகள் மத்தியிலயும் நீ எப்படி சந்தோசமா இருந்தன்னு இப்ப புரிந்து கொண்டேன்….என் இயேசப்பா கொடுக்கிற நன்மைகளை அவர் பிள்ளையா இருந்து வாங்குற சந்தோசத்தை காட்டிலும் இது ரொம்பவே வித்தியாசமான சந்தோசமா இருக்கு….இனிமே என் பொண்ணு நினைப்பு வரும் போதெல்லாம் அவளை என் இயேசப்பாகிட்டதான கொடுத்திருக்கேன்…ன்னு மனசுல தோணி சந்தோசம் மட்டும்தான் மிஞ்சும்ன்னு எனக்கு தோணுது….அவர் சொல்லி விட்டு பெரு மூச்சு விட்ட போது உண்மையில் வாயடைத்து போனாள் அவள்.

    பார்க்க முரட்டு சுபாவத்தில் இருக்கும் மனிதரில் கூட….அவளை இந்த உலகத்திற்கு கொடுத்த அவள் அப்பாவில் கூட இத்தனை அழகான இருதயம் இருக்குமா என்ன…..தன் தேவனுக்கு கீழ்படிய நினைக்கும் அவருடைய ஆர்வம் அவளை ஒரு முறை புரட்டி எடுத்து விட்டது…சில நிமிஷங்களுக்கு முன் வரை ஐயோ…இங்கயே பிடிச்சி வைச்சிருவாரோ  என்று நினைத்த எண்ணம் முற்றிலும் மாறி போய்….நான் இங்கயே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்….என்று நினைத்த அந்த நொடி உடைந்து போனாள். நானா இயேசப்பா…..நானா அப்படி நினைச்சேன்…ஏன் இயேசப்பா அப்படி நினைச்சேன்…..யோசித்து யோசித்து அழுதாள்.

    அவள் கண்களில் இருந்த கண்ணீர் வந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் அவளை ஒரு கரம் ஆற்றி தேற்றுவதை அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் இருதயத்தில் அந்த நேரத்தில் கூட அந்த பாடல் வரிகள் ஒலித்து கொண்டிருந்தது……

    தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

    தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே

    தந்தை தாயிலும் மேலானவர்

    தாங்கி என்னை ஆதரிப்பவர்………

    ஆனா இயேசப்பா, அது அம்மா, அப்பா வெறுக்கிற குழந்தைகள் உணர்வில தோணுற விஷயம்…..நான்…..என் நிலைமை…… எனக்கே புரியலையே. அம்மா, அப்பான்னு இதுவரை சொல்லிட்டு இருந்த உறவுகள் அனைத்தும் பிரசங்கி சொன்ன மாதிரி மாயை…மாயை….ன்னு சொல்லுற மாதிரி ஆச்சே….. ஏன் இயேசப்பா….எனக்கு மட்டும் இந்த நிலமை…..அவள் இருதயம் ஓலமிட்டது.

    ஏன் இயேசப்பா நான் பிறந்தேன்…..சொன்ன அந்த நொடி அவள் வாயை யாரோ பொத்துவதை போல உணர்ந்தாள்….அடுத்த வார்த்தைகளை அவளால் பேச கூட முடிய வில்லை….என் மனசு கஷ்டமா இருக்குப்பா…. உங்ககிட்ட சொல்லி நான் அதை அணைக்க நினைக்கிறேன்…..

    எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணையை வார்க்காதே……. தெளிவான வார்த்தைகள்….புரிய வில்லை அவளுக்கு. நான் என் இயேசப்பாகிட்ட என் மன பாரங்களை சொல்லுறது எப்படி எண்ணெய் விடுறதா இருக்கும்…அவள் யோசித்து கொண்டிருந்த போதே…..

    அவளுடைய அம்மா, அப்பா…….இல்லை, ஜேம்ஸ் அம்மா, அப்பா…… அவள் அறையில் நுழைய போகும் சத்தத்தை அவள் உணர்ந்தாள். ஐயோ இயேசப்பா, எல்லா விசயத்தையும் நீங்க எனக்கு தெரியப்படுத்திட்டீங்க. இனிமே எப்படி அவங்களை முந்தி மாதிரி என்னால பார்க்க முடியும்…பார்த்ததும் அழுது ஏதாவது ரகளை பண்ணி….வேண்டாம் பிரெண்ட்….என்னை காப்பாத்துங்க……. ப்ளீஸ்….அவள் குரலை அவளால் கேட்க முடிந்தது….

    அந்த நேரம் யாரோ அவளை தூக்குவதை போல உணர்ந்தாள்…..தேங்க்ஸ் இயேசப்பா….தேங்க் யூ சோ மச்….அவள் உதடுகள் சொன்ன அந்த நொடி அவள் அறையில் அவர்கள் நுழைந்திருந்தனர். அவர்களுடைய கண்கள் அவளை பார்க்க முடியாமல் கலங்கி கொண்டிருந்த வேதனையை அவளாலும் பார்க்க முடிந்தது…ஆனால் அடுத்த நொடி கண்களில் தூக்கம் வந்ததை அவளால் கூட கட்டுப்படுத்த முடிய வில்லை…….

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    seven − 2 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>