• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 14

    சுற்றிலும் இருந்த மலைகளும், காலை ரொம்பவே மிதமாக வருடும் மிருதுவான மணலும் உள்ளத்தில் அவளுக்கு அதிக சந்தோசத்தை கொடுத்தது. இப்ப பக்கத்தில நம்ம ஏஞ்சல் இருந்தா நல்லா இருந்திருக்குமே? மனதில் யோசித்து கொண்டாள். ஆனா அதற்கு தேவன் சித்தம் இல்லையே என்று தன்னையே தேற்றி கொண்டாள்.

    காலாற நடந்தாள். தனக்கு எவ்வளவு முடியும் அன்று அவள் நினைத்தாளோ அந்த அளவு நடந்து தீர்த்தாள்.

    அப்பா, நீங்க இந்த பூமியில வைத்திருக்கிற மணலும், கல்லும் கூட அழகாக இருக்கு. ரொம்ப அழகாக நீங்க படைத்திருக்கீங்க. மனதில் தன் தேவனுக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்தினாள்.

    அப்பா, நீங்க ஜலத்தை ஓரிடத்தில் சேர்த்து அதற்கு சமுத்திரம்னு பேர் வைச்சதும், அடுத்து, கடலின் கடையாந்திரத்தில் அஸ்திவாரம் போட்டு, பூமியை உருவாக்கினதையும் நான் பார்த்துட்டேன். ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் இயேசப்பா. இந்த உலகத்தில மற்ற யாருக்கும் கிடைக்காத கிருபையை எனக்கு நீங்க பாராட்டினதற்காக என் முழு மனதோடும் உங்களை துதிக்கிறேன். ஆமென்.

    தேங்க் யூ இயேசப்பா….. தேங்க் யூ இயேசப்பா………என்றவாறு முணங்கி கொண்டிருந்தவளை அவள் அம்மா எழுப்பினார்கள். குட்டிமா, என்ன தூக்கத்திலேயே இயேசப்பாக்கு நன்றிகள் சொல்லிட்டு இருக்க. ஏதாவது இயேசப்பாவை குறித்து தரிசனமா….

    நாள் விடிந்தது அப்பொழுதுதான் அவளுக்கும் புரிந்தது. ஏற்கனவே ஏஞ்சல் சொன்னது மனதில் தோன்றவும் இல்லைமா. நான் அப்பவே எழுந்திட்டேன். prayer பண்ண வரதுக்குள் கண்ணை மூடிக்கிட்டே நம்ம இயேசப்பாவுக்கு நன்றிகள் சொன்னேன். அம்மாவிடம் பொய் சொல்ல நேர்ந்தற்காக இயேசப்பாவிடம் சாரி கேட்டு கொண்டாள்.

    சரி குட்டிமா. முகம் கழுவிட்டு வா. நானும் அப்பாவும் உனக்காகத்தான் காத்திட்டு இருக்கிறோம்.

    பிரஸ் பண்ணி, முகம் கழுவி வந்தவள், அம்மா, அப்பாவோடு family prayerல் கலந்து கொண்டாள்.

    காலையில் சாப்பாடு மேஜையில் கொஞ்சம் கூடுதலாகவே அயிட்டங்கள் தெரிந்தது. இன்று லீவ் நாள் என்றாலும், அவளுடைய அப்பாக்கு ஆபீஸ்ல முக்கியமான வொர்க் இருந்ததால வேகமாகவே சென்று விட்டார்.

    அம்மா, இன்னிக்கி ஏன் இத்தனை அயிட்டங்கள்ன்னு தெரிந்து கொள்ளலாமா? ஆர்வத்துடன் கேட்ட தன் மகளுக்கு புன்முறுவலுடன் இன்னைக்கி நம்ம வீட்டுக்கு உங்க மாமா பொண்ணு வர போறா. இப்ப வருகிற நேரம்தான். அவளுக்காகத்தான் இந்த எல்லா ஏற்பாடும்.

    உடனே அவள் முகத்தில் எங்க இருந்து அந்த எரிச்சல் வந்ததோ அவளுக்கே தெரியாது. அவளின் முக மாற்றத்தை கண்டு பிடித்தவராய்……….என்ன ஆச்சு உனக்கு குட்டிமா. உன்னுடைய மாமா பொண்ணு வாரான்னு சொல்லி இருக்கேன். ஆனா உன் முகத்தில் ஒரு சின்ன சந்தோசம் கூட இல்லை.

    அது வந்து அம்மா……அவளால் உண்மையை சொல்ல முடியலை. அவளை பார்த்தாலே எனக்கு பிடிக்கலைமா. மனதில் வார்த்தைகள் இருந்தாலும் அம்மா முன் சொல்ல தயங்கினாள். 

    நானும் பார்க்கிறேன் குட்டிமா, ரேஷ்மி எப்ப நம்ம வீட்டுக்கு வந்தாலும் உனக்கு பிடிக்கிறதில்லை. அது ஏன்? அவ உன்னோட 5 வயது இளைய பொண்ணு. அப்ப நீதான நல்லபடியா பார்த்துக்குரனும். ஆனா……

    அம்மா அடுத்து பேசுவதற்குள்…………அம்மா, அவ வந்தா நீங்க என்னை கண்டுக்கவே மாட்டீங்க. எப்ப பார்த்தாலும் அவ பின்னாடியே ஓடி அவளுக்கு சாப்பாடு கொடுக்கிறதும், அவளுக்கு விளையாட்டு காண்பிக்கிறதும்தான உங்களுக்கு பிடிச்சிருக்கு.

    அவளை தன்னோடு அணைத்தவர்,………..குட்டிமா, நீ இயேசப்பா பொண்ணு. உனக்கே இப்படி பொறாமை வரலாமா? ரேஷ்மி பற்றி உனக்கு தெரிந்த விசயம்தான. அவளுக்கு அம்மா கிடையாது. அவளுக்கு 2 வயது இருக்கும் போதே உங்க அத்தை இறந்து போயிட்டாங்க. அப்ப அவளை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம பொறுப்புதான.

    அம்மா……அவள் சொல்ல வருவதற்குள்….உன்னால உன்னுடைய பொறாமை குணத்தை மாற்ற முடியலைன்னா நீ நம்ம தேவன்கிட்ட அதில் இருந்து வெளியே வருவதற்கு பலத்தை கேளு. ஏன்னா பொறமையோ எலும்புருக்கின்னு நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கு.

    சரிமா, நான் கண்டிப்பா இயேசப்பாகிட்ட பலத்தை கேட்குறேன். அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே, ரேஷ்மி,……அத்தை……….என்ற வண்ணம் ஆசையோடு ஓடி வந்து, தனது அத்தையை கட்டி பிடித்தாள்.

    இதற்கு முன் இருந்த திடன் அவளில் கொஞ்சம் கூட இல்லை. தேவனின் பிள்ளையாக இருந்தும், சாத்தானின் தந்திரங்களை பற்றி இயேசப்பா மூலமாகவே சொல்லி கேள்வி பட்டவளா இருந்தும், அந்த நேரத்தில் அவள் தன்னை சாத்தான் வசிய படுத்துவதை அனுமதித்து கொண்டுதான் இருந்தாள்.

    “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் ஓடி போவான்.”

    தேவ வார்த்தைகளை அவளோடு என்றும் நிற்கும் ஏஞ்சல், அவள் காதருகே வந்து சொல்லியும், அவளுடைய பொறாமை குணம் அவளை கேட்க விடாமல் தடுத்தது. தயங்கி தயங்கி அவளை விட்டு ஏஞ்சல் செல்லுவதை தேவனும் பார்த்து கொண்டுதான் இருந்தார். இயேசப்பாவின் விழிகளில் கண்ணீர் எட்டி பார்த்தது.

    நல்லா இருக்கியா ரேஷ்மி குட்டி. அப்பா எங்கடா?

    “நான் நல்லா இருக்கேன் அத்தை. அப்பா காரை பார்க் பண்ணிட்டு இருக்காங்க.” மழலை மொழியில் அவள் பேசுவதை ரசித்தவர் “சாப்பிட்டியா”

    இல்லை என்பது போல தலை அசைத்தவள்………அப்பா கூட திட்டினாங்க. நான்தான் அப்பாகிட்ட சொன்னேன். நான் அத்தை வீட்டுலதான் சாப்பிடுவேன். ப்ளீஸ்ன்னு சொன்னதும் அப்பாவும் சரின்னு சொல்லிட்டாங்க. சொல்லி விட்டு சிரித்தாள்.

    அப்பொழுதான் அவளை பார்த்த ரேஷ்மி, பாப்பா எப்படி இருக்க……..தன்னுடைய அப்பா அவளை அப்படி கூப்பிடுவதால், ரேஷ்மியும் கிண்டலுக்கு அவளை பாப்பா என்று சொல்லித்தான் கூப்பிடுவாள்.

    ம்…….என்ற படி முகத்தை திருப்பி கொண்டு தன்னுடைய ரூமில் நுழைந்தவள், கதவை டப்பென்று அடைத்து விட்டு அழ ஆரம்பித்தாள்.

    சாத்தானும் அவனுடைய தூதர்களும் கை கொட்டி இவளை பார்த்து சிரித்து கொண்டிருக்க, எந்த காரியத்தையும் புரிந்து கொள்ள முடியாதவளாய்………நான் ஏன்தான் பிறந்தேனோ? எங்க அம்மாக்கு என்னை விட ரேஷ்மியை தான் பிடிச்சிருக்கு. எனக்கு யாருமே கிடையாது. நான் அனாதை…………

    அவளுடைய கஷ்டம் எதிலும் இயேசப்பா, இயேசப்பா என்று சொல்லி கொண்டிருப்பவள், இன்று மறந்தும் அவர் பெயரை உச்சரிக்காமல் புலம்பி கொண்டே இருந்தாள்.

    சிறிது நேரம் கழித்து கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் கதவை திறந்தவள் முன்பு அவளுடைய மாமாதான் நின்று கொண்டிருந்தார்.

    என்ன பாப்பா, நான் அப்பவே உன்னை எதிர்ப்பார்த்தேன், நீ என்னை பார்க்க வருவன்னு. குரலில் வேதனை தெரிந்தது.

    அது மாமா…….கொஞ்சம் தூக்கமா வந்துச்சு……அதுனாலத்தான்…….

    காலையில் இருந்து சரளமாக பொய் சொல்லி கொண்டிருப்பது அவளுக்கும் கஷ்டமா இருந்தது.

    அம்மா சொன்னாங்க. ரேஷ்மி உன்னை பாப்பான்னு சொல்லி கூப்பிட்டதால நீ கோபிச்சிகிட்டு போனன்னு.

    இல்லை என்று அவளால் மறுக்க முடியவில்லை.

    அவ சின்ன பிள்ளைன்னு உனக்கும் தெரியும். அம்மா இல்லாத பிள்ளை என்பதால நான் செல்லம் கொஞ்சம் அதிகமாகவே கொடுக்கிறேன்ன்னு எனக்கும் நல்லா தெரியுது பாப்பா. சிறிது யோசித்தவர்…..

    ஆனா நீ அப்படி கிடையாது. அவ ஏதாவது தப்பு பண்ணினா, என்னை மாதிரியோ இல்லை உன் அம்மா மாதிரியோ சும்மா விட வேண்டாம். அவளை சரியான காரணமா இருந்தா கோபப்படு. இரண்டு அடி கொடுத்தா கூட நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன், சரியா……

    அவள் தலையை தடவி விட்டு சென்றவர், நடந்து கொண்டே …………..ரேஷ்மியை நல்லா பார்த்துக்கோ. அடுத்து சாயந்திரம் மாமா வந்த பிறகு, உங்க ரெண்டு பேரையும் பீச்சுக்கு கூட்டிட்டு போறேன். அப்பா அதற்குள்ள வந்துட்டா அப்பாவும், அம்மாவும் நம்ம கூட வருவாங்க, உனக்கு சந்தோசமா இப்ப?……மாமா கையசைத்து சென்ற பிறகும் அவள் மனதில் அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது.     

    ஏன் நான் இப்படி செஞ்சேன். நான் இயேசப்பா பிள்ளைதான. ஆனா நான் நடந்த விதம் பார்த்து என்னுடைய இயேசப்பாவே வேதனைப்பட்டிருப்பாங்க.

    மனதில் யோசித்தவளாய் இயேசப்பா உங்ககிட்ட சாரி……….சொல்ல வருவதற்குள் ஐயோ……என்ற சத்தம் கேட்கவும் பதட்டத்துடன் குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள்.

    ரேஷ்மிதான் அவளுடைய படம் வரைந்த சார்ட் கையில் வைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

    என்ன ஆச்சு……என்று சொன்னவளிடம் தீயில் பாதி கருகி போன அவளுடைய சார்ட்டை காண்பித்தாள்.

    ஒரு நொடி அவளுக்கு தன் இதயமே வேலை செய்வதை நிறுத்தியது போல தோன்றியது. அவள் ஒரு வாரத்துக்கு முன் நடந்த பென்சில் வரைதல் போட்டியில் பரிசு பெற்ற சார்ட்தான் தீயில் கருகி இருந்தது. அப்பா அதை தனக்கு frame பண்ணி தருவதாக வாக்கு கொடுத்திருந்தார். பத்திரமாக பீரோவில் வைத்து பூட்டி இருந்தும் இது எப்படி……

    பாப்பா, நான் கிச்சன்ல இருந்து லைட்டர் எடுத்து வைச்சு விளையாடிட்டு இருந்தேனா……அவளுடைய மழலை மொழியில் சொல்லி கொண்டிருந்தாள். ரேஷ்மியின் வார்த்தையை கேட்கும் நிலையில் இல்லை என்றாலும் கோபத்தின் உச்சத்தில் அவள்.

    அப்பதான் நான் எடுத்து வைச்சிருந்த உன்னுடைய பேப்பரில் தீ பிடிச்சிருச்சு. நான் அதை அணைக்க பார்த்தேன். ஆனா……

    அவள் தன்னுடைய கைகளை அவளிடம் காண்பிக்க முயன்றாள். ரேஷ்மியின் சின்ன கைகளில், அந்த தீ காயங்களை ஏற்படுத்தி இருந்தது. அதை பார்க்கிற நிலையில் கூட இல்லாமல் பொறுமையை இழந்தவளாய் ஒண்ணும் நீ பேச வேண்டாம். பேசுறதை நிறுத்து. இப்பவே என் ரூமை விட்டு போ.

    சின்ன விழிகளில் கண்ணீர் எட்டி பார்த்தது. அவர்கள் இருவரின் சண்டையை நிறுத்தும் நிலையில் அவளுடைய அம்மா வீட்டில் இல்லாதது மிக பெரிய துரதிஷ்டம்.

    ஏன் பாப்பா இவ்வளவு கோபப்படுற. நான் உண்மையில் தெரியாமதான செய்தேன். அதற்கு ஏன் என்னை திட்டுற. அழுது கொண்டே கேட்டவளிடம்

    இது தெரியாம செய்ததா……எனக்கு பரிசு வாங்கி கொடுத்த சார்ட்டை இப்படியா கருக்குவ……

    நான் வேணும்னே செய்யலை……………

    ரேஷ்மியை பேச விடாமல் தடுத்தவள்………நீ உன் சின்ன வயதில் இருந்தே இதே தப்பைதான் பண்ணுற, உன்னுடைய அம்மாவையும் நீ தான இதே மாதிரி விளையாடுறேன்னு பேர்ல கொன்ன……கோபத்தில் சொல்லி விட்டவள் அப்பொழுதுதான் நாக்கை கடித்தாள். கிட்டத்தட்ட இந்த நிமிஷம் வரை ரேஷ்மிக்கு, எல்லாரும் மறைத்த காரியம். ஆனால் இன்று அவள் மூலமாக ரேஷ்மிக்கு விஷயம் தெரிந்து விட்டது.

    நான்தான் எங்க அம்மா இறந்து போனதற்கு காரணமா? பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.

    சொல்லு, நான்தான் காரணமா…….இல்லை, அது கோபத்தில சும்மா சொன்னேன்.

    இல்லை உன்னை பற்றி எனக்கு தெரியும். எங்க அப்பா சொல்லி இருக்காங்க, நீ பொய் சொல்லவே மாட்டேன்னு.

    ரேஷ்மி நான் கோபத்தில ஏதோ பேசிட்டேன்…என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் அழ ஆரம்பித்து விட்டாள். ஸ்கூல்ல எல்லாரும் அவங்க அவங்க அம்மா கூட வரும் போது நான் மட்டும் தனியா, அம்மா இல்லாம இருக்கேன்ன்னு எத்தனை அழுதேன். நான் தான் காரணமா…..கடைசியில நான்தான் எங்க அம்மா இறந்து போனதற்கு காரணமா…..

    இல்லை ரேஷ்மி…..அப்படியொண்ணும் கிடையாது.

    இல்லை…….நான்தான் எங்க அம்மாவை கொன்னுருப்பேன். நீ என்னைக்கும் போய் சொல்ல மாட்டியே….

    திரும்பி திரும்பி அதே வார்தைகளை புலம்ப ஆரம்பித்தாள் ரேஷ்மி. பயந்தவளாய் தன்னுடைய அம்மாவை தேடிய போது, அப்பொழுதுதான் வீட்டினுள் நுழைந்தார்.

    அம்மா…….கதறி விட்டாள். என்னடா ஆச்சு….அம்மா துடித்து போனவராய் காய்கறி கூடையை அப்படியே வைத்தவர் அவளைதான் தாங்கி நின்றார்.

    அம்மா, ரேஷ்மி…..ரேஷ்மி…..வார்த்தைகள் வர வில்லை. என்ன ஆச்சு…..அவளை பின் தொடர்ந்தவர், ரேஷ்மி மயக்கம் போட்டிருந்த காட்சியைதான் பார்க்க முடிந்தது.

    ஏன் என்ன ஆச்சு குட்டிமா. எப்படி விழுந்தா?…..ஒன்றும் சொல்ல வில்லை.

    தெரியலைமா…….மனசாட்சி குத்தியது…….உண்மையை சொல்லு குட்டிமா. மனதினுள் குரல் கேட்டது. வாயை திறவாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

    உடனே முதலில் தன்னுடைய தம்பிக்குத்தான் போன் செய்தார். இருவரும் சேர்ந்து மயக்க நிலையில் இருந்தவளை, அப்படியே அள்ளிக் கொண்டு காரில் சென்றனர்.

    அம்மா வரும் வரை நீ வீட்லயே இருமா……..சொல்லி விட்டு சென்றிருந்தனர்.

    முழுமையும் குழப்பத்தில் இருந்தாள். நான்தான் இதை செஞ்சேனா…..ரேஷ்மி இந்த அளவுக்கு ஆனது என்னால்தான் ஆச்சா……..இன்னும் இன்னும் குழப்பம்……அழுதாள், முழுமையும் அழுதாள். கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. ஆனால் அத்தனை கஷ்டத்திலும் தனது இயேசப்பாவை தேட ஏனோ அவளுக்கு தோன்ற வில்லை.

    கதறி அழுதாள். போன் செய்து ரேஷ்மிக்கு எப்படி இருக்குன்னு கேட்க கூட முடியாதவளாய் குற்ற மனமுள்ளவளாய் அழுதாள். அப்படியே தூங்கியும் போனாள்.

    தூக்கத்தில் இருந்து எழுந்தவள் நேரத்தைத்தான் முதலில் பார்த்தாள். இவ்வளவு நேரம் ஆச்சா………இன்னும் யாரும் போன் பண்ணலை. அப்ப ரேஷ்மிக்கு எதுவும் ஆச்சா……அதற்கு மேல் அவளால் யோசிக்க கூட முடியவில்லை. அப்ப நான் பாவம் செய்திட்டேனா……..

    சொல்லி கொண்டிருந்த அடுத்த நிமிசமே…..அவள் கண் முன்பு குட்டையான உருவத்தில் மிகவும் கோரமான முகத்தோடு ஒருவன் வந்து நிற்கவும்……நீ யாரு? என்று கேட்டவளிடம் ஒன்றும் பேசாமல்……..அந்த உருவம் அவளை பார்த்து எகத்தாளமாக சிரித்தது. நான் சாத்தானின் தூதன். உன்னை நரகத்துக்கு கூட்டிட்டு போக என் எஜமானன் அனுப்பி இருக்காரு. வா, போகலாம்.

    வர மாட்டேன் நான். இல்லை……… நான் உன்கூட வர மாட்டேன்……..சொல்லி கொண்டிருந்தவளை………….என் எஜமானன் ஏற்கனவே சொன்னாரு. நீ ஈஸியில் வர மாட்ட. பிடிச்சி இழுத்துட்டு வான்னு சொல்லியிருந்தாரு, அதுனால….

    அவளுடைய கரங்களை வலிமையாக பிடித்து தர தரவன்று இழுத்து சென்றது. என்னை விடு. கை ரொம்ப வலிக்குது. என்னை விட்டுருன்னு சொல்லுறேனே. விடு என்னை………முரண்டு பண்ணி பார்த்தாள். எதையும் கண்டு கொள்ளாமல் அவளை பிடித்து இழுத்து சென்றது அந்த கரிய பூதம்.   

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    1 × = seven

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>