• வலிமையான ஜெபம் – 7

    ஹாய் குட்டிஸ், “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.

    உங்களுடைய மனதில நிறைய கேள்விகள் இருக்கலாம் குட்டிகளா. அதுவும் நீங்க தெரிந்து கொண்ட பீட்டரை பற்றி ரொம்பவே உங்க மனது கேள்விகள் எழுப்பிருக்கலாம். ஆனா உங்களில் சில பேரு பீட்டருக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு எங்களையே ஆறுதல் படுத்த ஆசைபடுறது எங்களுக்கு சந்தோசமாயிருக்குது குட்டிகளா.

    உங்களில் சில பேரு……..பீட்டர் தப்பு செய்யலை. ஆனாலும் அவன் தப்பு பண்ணினதா சூழ்நிலை வந்தப்ப, அவன் நம்ம இயேசப்பாவை நோக்கி கூப்பிட தயங்க வேண்டிய அவசியமில்லையே. அவன் பிரச்சனையை அவனுடைய நண்பர்கள் மறுத்தாலும் அவனை பத்தி தெரிந்த நம்ம இயேசப்பா இருக்காங்களே. அப்பான்னு அவன் ஒரு வார்த்தை சொன்னா போதும். உதவி செய்ய நம்ம இயேசப்பா ஓடோடி வந்துருவாங்களே. கண்டிப்பா எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. பீட்டர்க்காக வழக்காட நம்ம இயேசப்பா உண்டுன்னு நம்புறோம்.

    இன்னும் சொல்லப் போனா பீட்டர் அந்த தப்பை செய்யலைன்னு எங்க இயேசப்பா கண்டிப்பா எல்லாருக்கும் உணர்த்துவாங்க. அடுத்து எப்பவும் போல பீட்டர் வாழ்கையில சந்தோசம்தான்……..

    உங்களுடைய வார்த்தைகளுக்காக நன்றிகள் குட்டிகளா. ஆனா நீங்க உங்க மனதில……..பீட்டர் மாதிரியோ இல்லை நம்மளுடைய தாவீதை மாதிரியோ நாங்க தப்பு செய்யாத சமயம் கஷ்டப்படலையே. நாங்க கஷ்டப்படுறதுக்கு காரணமே நாங்கதான்னு உங்களை நீங்களே கஷ்டப்படுத்தும் போது நம்ம இயேசப்பா உங்களுக்காக வேதனைபடுறார் குட்டிகளா.

    நம்ம இயேசப்பா உங்ககிட்ட ஏற்கனவே சொன்ன வார்த்தையைத்தான் இப்பவும் சொல்ல ஆசைபடுறாங்க. தாவீது தன்னுடைய வாழ்கையில அத்தனை நிறைய விசுவாசத்தை, தாழ்மையை, தேவனுக்கு பிடித்த குணநலன்களை அடைந்தது ஒரே நாளில் நடக்கலை குட்டிகளா. நம்ம தாவீதும் நம்மளை மாதிரி சாதாரண மனிதன்தான். அவருடைய வாழ்கையில் கூட தவறுகள் இருந்துச்சு. ஆனா எந்த சூழ்நிலையிலும் அவர் நம்ம தேவனை நோக்கி கூப்பிட வெட்கப்பட்டதே கிடையாது.

    என்ன குட்டிகளா, ஆச்சர்யமா பார்க்குறீங்க. தாவீது தப்பு செய்தாரா…..நம்ம தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவன் பெயர் பெற்ற தாவீது கூட தப்பு செய்தவரான்னு நீங்க ஆச்சர்யமா கேட்கலாம். நாமளும் தாவீது மாதிரி துணிந்து தப்பு செய்யலாம் போல….அப்படின்னு உங்க மனதில நீங்க நினைக்கிறதுக்காக இல்லை குட்டிகளா. உங்களுடைய வாழ்கையில எத்தனையோ தவறுகள் பண்ணிருந்தாலும் அதில் இருந்து நீங்க விடுபட்டு நம்ம இயேசப்பாக்குள்ள சந்தோசமா இருக்கணும் என்பதற்காக அவர் நமக்கு வெளிப்படுத்துகிற தீர்வும், எச்சரிக்கையும். ஏன்னா….

    “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்…..”

    நெகேமியா 8 : 10

    நடந்து முடிந்த நம்முடைய தவறுதல்களில் இருந்து நாம வெளியே வர்றதுக்கும், இனி நாம நம்ம இயேசப்பா அன்புக்குள் நம்மளை காத்து கொள்வதுக்கும், நம்ம இயேசப்பா எப்பவும் நம்ம கூட இருக்கிறாங்க என்பதை நாம இன்றாவது தெரிந்து கொள்ள அவர் ஆசைபடுகிறார்.

    நம்ம தாவீது சவுல் ராஜாவுக்கு பயந்து ஓடின நிலைமை ஒரு நாள் நம்ம தேவனால் முடிவுக்கு வந்தது. சவுலும், அவருடைய மூன்று குமாரர்களும் பெலிஸ்தரோடு ஏற்பட்ட சண்டையில இறந்து போனாங்க. உடனே நம்ம தாவீது அப்பாடா …என்னை வேதனைப்படுத்தினவங்களுக்கு என்னுடைய தேவன் கரெக்டான தண்டனை கொடுத்திட்டாங்கன்னு சந்தோசப்படலை. ரொம்பவே வருத்தப்பட்டார்(II சாமுவேல் 1ம் அதிகாரம்). ரொம்ப ஆச்சர்யமா இருக்குதா குட்டிகளா. நம்ம தாவீதுடைய இந்த மனம் நம்ம தேவனுக்கு ரொம்பவே பிடித்தமான விஷயம். இந்த அளவு தேவனுக்கு உகந்த நிலைமையில வாழ்ந்த தாவீதுடைய வாழ்கையில ஒரு சோதனை வந்தது. அதுவும் ஒரு பொண்ணால.

    அவங்க யாருன்னா, தாவீதுடைய படையில ஒரு பாரக்கிரமசாலியா இருந்த உரியாவின் மனைவி பத்சேபாள். அந்த பொண்ணை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ள தாவீது நம்ம தேவனுக்கு பிடிக்காத பெரிய தப்பை பண்ணிட்டார் குட்டிகளா. பத்சேபாளுடைய கணவனை தன்னுடைய ஆட்கள் மூலமா கொன்று, அவங்களை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டார் தாவீது. அவங்களுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. என்ன குட்டிகளா…. நம்மால இது கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத விஷயம்தான். அப்ப நம்ம தேவன் எவ்வளவு தூரம் வருத்தப்பட்டிருப்பார்ன்னு உங்களால புரிஞ்சுக்க முடியுதா குட்டிகளா.

    என்ன குட்டிகளா, நீங்க ரொம்பவே வருத்தத்தில இருக்கீங்கன்னு நினைக்கிறோம். தன்னுடைய வாழ்கையில நம்ம தேவனை எல்லா நிலைகளிலும் தேடின தாவீதுக்கு தான் செய்தது தப்புன்னு தோணலையா….நம்ம மனது கேள்விகள் கேட்கலாம்.

    சரி குட்டிகளா, நாம தாவீதுடைய வாழ்கையை பார்ப்போம். நம்ம தேவன் தாவீதுக்கு தண்டனை கொடுக்கலையான்னு உங்க மனதில கேள்விகள் எழும்பலாம். யெஸ். தாவீதுக்கு தண்டனை கிடைத்தது. தேவன் தன்னுடைய மனிதனாகிய நாத்தான் தீர்க்கத்தரிசி மூலமா தாவீதின் தப்பை எடுத்துரைத்தார். தன் தப்பை உணர்ந்ததும் தாவீது முழுமையா நம்ம தேவன்கிட்ட மன்னிப்பை கேட்டார். நம்ம தேவனும் அவருடைய தப்பை மன்னிச்சாங்க. என்னது….தாவீது தப்பை நம்ம தேவன் மன்னிச்சிட்டாங்களா. நாம அவ்வளவு தூரம் ஆச்சர்யப்பட அவசியம் இல்லை. ஏன்னா நம்ம தேவன் தாவீதின் தப்பை மன்னிச்சாலும் அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டணைகளில் குறைவு இல்லை குட்டிகளா.

    உங்க முகம் திரும்பவும் வருத்தப்பட ஆரம்பிக்குதே. ஏன்? நம்ம தேவன் தண்டனை கொடுத்தாங்கன்னு மட்டும்தான் சொன்னோம். அதற்காக அவர் தாவீதை விட்டு விலகிட்டதா பொருள் இல்லையே. நம்ம தேவன் கடைசி நொடி வரை தாவீதை விட்டு விலகலை குட்டிகளா. அந்த தண்டனைகளை தாவீது கடந்த சமயம் கூட நம்ம தேவன் தாவீதோட இருந்தார்.

    இப்ப கூட நம்ம இயேசப்பா தாவீதை மாதிரி எல்லா சூழ்நிலைகளிலும் தன்னுடைய பிள்ளைகள் தன்னை நோக்கி கூப்பிடணும்னு ஆசைபடுறாங்க. எல்லா சூழ்நிலைகள்ன்னா இப்ப நமக்கும் புரிந்திருக்கும். மற்றவங்க, நம்மளை தப்பே செய்யாத சமயம் காயப்படுத்தும் போது மட்டுமில்ல நம்மளுடைய தவறுகளால் அவரை விட்டு ரொம்பவே பின் வாங்கி போயிருந்தாலும் கூட அவரை கூப்பிட தயங்க கூடாது.

    ஏன்னா நம்மளை ஆறுதல்படுத்துகிற ஒரே தேவன் அவர் மட்டும் தான் குட்டிகளா. அழுகிறதுக்கு ஒரு தோள் கிடைச்சா நல்லா இருக்கும், அப்படிதானே. அதுவும் இந்த உலகத்தை பார்த்து நாம திரும்பவும் பயப்படாம(இந்த உலகம் என்ன சொல்லும்னு…), நிம்மதியா ஒருத்தர் தன் மார்போட அணைத்து கொண்டா எவ்வளவு சந்தோசமா இருக்கும். அந்த தோளும், மார்பும் என்றும் நம்ம இயேசப்பாக்குரியதுதான் குட்டிகளா. ஏன்னா இந்த உலகத்தால நாம நினைக்கிற அளவுக்கு சமாதானத்தை கொடுக்க முடியாது.

    என்ன குட்டிகளா, இப்ப நம்மளால எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்ம தேவனை நோக்கி கூப்பிட முடியுமா? இப்பவும் நம்ம இயேசப்பா நம்ம கண்ணீரை துடைக்கிறதுக்கும், அவர் மார்போட நம்மளை அணைத்து கொள்வதற்கும், நாம என்ன சொன்னாலும் அதை கேட்கறதுக்கும், ஆவலா தன்னுடைய கரங்களை நீட்டி காத்திட்டிருக்கிறார். இப்பனாச்சும் நாம நம்ம இயேசப்பாவை நோக்கி கூப்பிடலாமா?

    வலிமையான ஜெபம் என்பதை குறித்து நம்ம இயேசப்பா(சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தை) நமக்கு சொல்லி கொடுக்கிற காரியங்களை அடுத்த முறை கேட்கலாமா. நமது தேவனுக்குள் சந்திப்போம்……

    Related Post

    Categories: வலிமையான ஜெபம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − one = 7

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>