-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 34
இவர்கள் சிரித்து கொண்டு இருக்கும் போதுதான் அவனின் அம்மா வீட்டினில் நுழைந்தார். அவர் கேட்டின் முன் நிற்கிற கூட்டத்தை அதிசயமாகத்தான் பார்த்தார். ஆனால் இது வரை சத்தம் எழுப்பி பேசி கொண்டிருந்த கூட்டம், இப்போது கப்சிப்பாகி விட்டது. எல்லாருடைய கண்களும் இப்போது, அவன் அம்மா மேல்.
பார்ப்பதற்கு வேதாவின் சாயல் தெரிந்தது. ஆனால் கண்களில் கண்ணீர் வந்து அதை துடைத்தது அழகாகவே தெரிந்தது. வேதாவும் தன் அம்மாவை பார்த்ததும், ஓடி போய் கட்டிப் பிடித்து கொண்டான். அவன் கண்களிலும், அவன் அம்மாவின் கண்களிலும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதுவரை இருந்த துக்கம் எல்லாம் இன்றோடு மாறி போச்சு என்பதை சொல்லுகிற சந்தோஷ கண்ணீராய் தான் அவளுக்கு தோணியது.
உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்.
என்னுடைய இயேசப்பா எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க. மனதினில் நினைத்து கொண்டாள் அவள்.
முதலில் அவன் அம்மாதான் பேச ஆரம்பித்தார்.
எங்கடா போன. உன்னை வீட்டில காணும்ன்னு ஒவ்வொரு இடமாய் தேடி வந்திட்டு இருந்தேன். உங்க அப்பாகிட்ட பிள்ளையை காணும்னு சொன்னா…. ஊர்ல எல்லார் வீட்லயும் தேடி பாரு. ஒவ்வொரு வீடா நுழைஞ்சு என் பெயரை கெடுக்கிறதுக்கேன்னு பிறந்திருக்கான்னு….. சொல்லறாங்க. போன்லயே மோசமா திட்ட ஆரம்பிச்சிட்டார். நான் என்ன செய்ய…. உங்க அப்பா சொன்ன மாதிரிதான் ஒவ்வொரு வீடா கேட்டு அலைஞ்சேன்….என் பிள்ளையை பார்த்தீங்களா…..ன்னு
அவன் பின் திரும்பி. அவளை பார்த்தான்…..பார்த்தியா….என் அப்பா மேல என் மேல வைச்சிருக்கிற அன்பை……என்று கேட்டது போல இருந்தது அந்த பார்வை.
ஆனால் அவள் ஒன்றும் சொல்ல வில்லை. அடுத்து வயலுக்கு போயிட்டு பாதியிலேயே வீடு திரும்பின காபிரியேல் சித்தப்பாதான் சொன்னாங்க. நீ ஜான் அங்கிள் வீடுல இருக்கிறதா…..ஆனா இன்னொரு விசயமும் சொன்னாங்க. என் முகத்தை பார்த்து சொல்லுமா. இது எப்படி நடந்துச்சு. உன் முகத்தை பார்த்தப்பவே தோணுச்சு. நம்ம இயேசப்பா உன்னை எப்படி குணமாக்கினாங்க கண்ணு…….. அவன் அம்மா ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவன் முதலில் தன் வாய் திறந்து அம்மா….என்று சொன்ன நாளை விட, இன்று அவன் பேச போகிற வார்த்தைகளை தான் அவர் அதிகமாக எதிர்பார்க்கிறார் என்று அவளுக்கும் புரிந்தது.
அம்மா, இது நம்ம இயேசப்பா செய்த அதிசயம். நான் உங்களை விட்டு, எப்படி அந்த மலை பக்கம் போனேன்னு தெரியலை. ஆனா மலையில இருந்து கீழே இறங்கி இருந்த சமயம் நான் குணமாகி இருந்தேன். அடுத்துதான் நம்ம ஜான் அங்கிள் வீட்டுக்கு வந்திருக்கிற இந்த பொண்ணை பார்த்தேன். நானும், இந்த பொண்ணும் பேசிட்டே இங்க வந்திட்டோம்…என்று அவன் சொல்லி முடித்திருந்த போது, அவன் அம்மாவின் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
என்னை ஏன் பார்க்க வரலைடா…….என்ற ஒரு குற்ற சாட்டு கூட அதில் இல்லாதது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
என் பையனை என் இயேசப்பா குணமாக்கிட்டாங்க….என்ற நன்றிப்பெருக்கு மட்டுமே அந்த கண்ணீரில் அவளுக்கு தோணின காரியம்.
இயேசப்பா, இப்படி பொறாமை கூட இல்லாம ஒருத்தரால் ஒருத்தர் மேல அன்பு வைக்க முடியுமா என்ன…..மனதினில் கேட்டாள். யாரோ ரொம்ப பக்கத்தில்…..ஆனா அவள் தெளிவா கேட்கும் விதம்…..சொல்லி விட்டு போன மாதிரி தோணியது. பொறாமை இருந்தா அதற்கு பேர் உண்மையான அன்பு கிடையாது…..என்று. வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள். அவள் இயேசப்பாதான் அவளுக்காக அனுப்பி இருந்த வார்த்தை. ஆனா நான் இன்னும் அந்த நிலையை அடையலையே…..மனதினில் நினைத்து வெட்கப்பட்டவளாய் கீழே குனிந்து கொண்டிருந்தாள்.
அவன் செய்கை கூட அவளுக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாக இருந்தது. எத்தனை விதமான உணர்சிகளின் மத்தியில அவங்க அம்மாவை பார்த்தப்ப இருந்தான். ஆனா ஒரு வார்த்தை கூட…..தவறலையே. இயேசப்பா என்ன சொல்லி கொடுத்தாங்களோ, அதை மட்டும்தான் சொல்லி இருக்கான். மனதினில் அவனை பற்றி வியந்து கொண்டிருந்த சமயத்தில் தன்னையும் ஆராய்ச்சி செய்ய தவற வில்லை. நான் முழுக்க முழுக்க உணர்சிகளுக்கு அடிமையாகுற இயேசப்பா பிள்ளை. தன்னை திட்டி கொண்டாள் தனக்குள்.
அதற்குள் கார் சத்தம் கேட்கவும் எல்லார் பார்வையும் கேட்டின் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்களை அதிசயமாய் பார்த்தவாறு நுழைந்த ஜான் அங்கிள் மேலும், அவளுடைய அப்பா மீதும் இருந்தது.
காரில் இருந்து இறங்கிய போதே, வேதாவை பார்த்து விட்டார் ஜான் அங்கிள். உண்மையில் அவருக்கு வார்த்தைகள் வர வில்லை. அதற்குள் அவன் ஓடி போய் ஜான் அங்கிள் முன்பு நின்றான். அங்கிள்…..அவன் பேசி கொண்டிருந்த போதே….அவனை தூக்கி முத்தம் கொடுத்தவராய்…..
எப்படிடா இருக்க. ரொம்ப மாறிட்ட. முகம், உன் பார்வை எல்லாம் ரொம்பவே பெரிய மனுஷ தனமா இருக்குது. எப்படி சரியாச்சு உனக்கு…… அவர் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார்.
இயேசப்பா செய்த அதிசயம் அங்கிள்….அவன் ஒரே ஒரு வார்த்தையை மட்டும்தான் சொன்னான். ஜான் அங்கிளின் கண்களில் கூட கண்ணீர் எட்டி பார்த்தது. ஆனால் அவசரமாக உள்ளே வாங்கினார் கண்ணீரை. எத்தனை பெரிய சந்தோசம் என் இயேசப்பா கொடுத்திருக்காங்க….மனதினில் தன் தேவனுக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்தினார்.
உனக்கு சரி ஆயிருச்சுன்னு விசயம் தெரிந்தா உங்க அத்தை ரொம்ப சந்தோசப்படுவாடா. உங்க அத்தையையும் வரச் சொல்லுறேன்…..என்றவாறு போனை ஆன் பண்ணி பேச ஆரம்பித்தார்.
போனின் அடுத்த முனையில் பேசி கொண்டிருந்த மேரி ஆன்ட்டிக்கும் இது ரொம்பவே சந்தோசத்தை கொடுத்தது என்பதை ஜான் அங்கிள் சத்தமாக சிரிப்பதின் மூலமாக இவளும் தெரிந்து கொண்டாள்.
சரி எதுக்கு எல்லாரும் வெளியவே நிற்குறீங்க. உள்ள வாங்க…..என்றவாறு ஜான் அங்கிள் அழைத்த போது
அவன் அம்மாதான் அவசரமாக மறுத்தார். இல்லை அண்ணன். நான் வீட்டுக்கு போறேன். வேதா உங்க கூட இருக்கட்டும். நீங்கதான் அவனை நல்லா பார்த்துக்குவீங்களே. நான் இவங்க அப்பா வரதுக்குள்ள வீட்டுக்கு போகணும்….என்று கிளம்ப போனவரை
உன் பையன் முழுக்க முழுக்க நம்ம இயேசப்பா கிருபையால குணமாகி நம்ம முன்னாடி நிற்கிறான். இந்த பெரிய சந்தோசத்தை நாம எல்லாரும் நம்ம இயேசப்பாக்கு நன்றிகள் சொல்லி கொண்டாட வேண்டாமா??? இன்னும் கொஞ்சம் நேரத்தில உங்க அண்ணி வந்திருவா. இங்கயே சாப்பிட்டுதான் போகணும். நீ முதலில் வீட்டுக்குள் வந்து உட்காரு……என்று அவர் உரிமை எடுத்து பேசவும்
அவன் அம்மா கதற ஆரம்பித்து விட்டார். அண்ணன் உங்க குணத்தை என் புருஷன் என்னைக்கும் புரிஞ்சிக்கவே மாட்டார். எவ்வளவு நல்லவங்க நீங்க. உங்க மேல போய் பொய் புகார் ரெடி பண்ணி, இந்த ஊர்ல இருக்கிற எல்லாரையும் எதிரா மாத்திட்டாரே. அவர் நல்லாவே இருக்க மாட்டார்……சாபம் இட்டவரை
நீ இப்ப பேசாம இரு. ஒரு நாள் கண்டிப்பா வேதா அப்பா புரிஞ்சிக்குவார். என்னை பத்தி தெரிந்து கொள்ளலைன்னாலும் பரவாயில்லை. நம்ம இயேசப்பாவை புரிஞ்சு கொண்டா போதும். இப்படி சாபம் கொடுக்கிற பழக்கத்தை முதல்ல விடு. நீயும் இயேசப்பா பிள்ளைதான……...அவர் சொல்லி கொண்டிருந்த போது உண்மையில் அவளுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
சே…..போயும் போயும் இப்படிப்பட்ட இடத்திற்கு வரதுக்குதான் நான் என் இயேசப்பாகிட்ட இவ்வளவு பிகு பண்ணினேன். முள் பாதையில் கூட, என் இயேசப்பாவை நேசிக்கிற என் வயதை ஒத்த வேதா…. ரொம்பவே தாழ்மையான நிலையில் இருந்தாலும், இப்பவும் என் இயேசப்பாவை ருசிக்கிற பாட்டி……. தன்னை வேதனைபடுத்துற வேளையிலும் கூட மற்றவங்களை நேசிக்கிற ஜான் அங்கிள்……. தன் பையன் அன்பை கூட விட்டு கொடுக்க நினைக்கிற ஒரு அம்மா……. எத்தனை அழகான சாட்சிகள் நிறைந்த ஒரு பரலோகமே இந்த பூமிக்கு வந்த மாதிரி இருக்கு. இந்த இடத்தை போய் நான் வேண்டாம்னு நினைச்சேனே…..சாரி இயேசப்பா. நான் இங்க உங்க அன்பை புரிந்து கொண்டது மட்டுமில்ல…..உங்க அன்புக்குள்ள எத்தனை நிறைவான வாழ்கையை ஒரு மனிதனால எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வாழலாம்ன்னு என்பதையும் தெரிஞ்சிகிட்டேன்…….மனதினில் சொல்லி கொண்டிருந்தாள்.
அத்தனை கூட்டத்தின் மத்தியிலும், நெகிழ்வான நேரத்தில் கூட அவளுடைய அப்பாவின் கண்கள் தன் பெண் மேல்தான் இருந்தது. தன் பொண்ணு ஏதோ தீவிரமாக யோசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டாலும், பாவம் நாங்க யாரும் இல்லாம, தெரியாத இடத்தில வந்து என் பொண்ணு கஷ்டப்படுறதுக்கு நான் தான் காரணம்….மனதினில் சொல்லி கொண்டார்.
தன் அப்பா தன்னைதான் பார்த்து கொண்டிருக்கிறார் என்பதை அவளும் கண்டு கொண்டாள். சந்தோசமாகத் அப்பா பக்கத்தில் வந்து நின்றவள், அப்பா….எனக்கு இந்த ஊர்ல ஒரு புது பிரெண்ட் கிடைச்சிருக்கான்….யார் தெரியுமா??? இந்த வேதாதான்…..கைகளை அவனை நோக்கி நீட்டினாள்.
வேதாவும் அவள் அப்பா அருகில் வந்தவன்….வணக்கம் அங்கிள்…..என்று சொல்லி சிநேகமாய் சிரித்தான்.
என் பொண்ணு ரொம்ப போர் அடிச்சிட்டாளோ வேதா…..அவள் அப்பா கேட்டதுக்கு
அப்பா, என்னை பத்தி…..அவன் செல்லமாக கோபப்பட
இல்லை அங்கிள். உங்களை பற்றியும், ஆன்ட்டியை பற்றியும் ரொம்பவே உயர்வா சொல்லிட்டு இருந்தா. நீங்க நம்ம இயேசப்பாக்குள்ள வாழுற சாட்சிகள்ன்னு சொன்னா…….அவன் பிரமிப்புடன் சொல்லவும்
அவ சும்மா சொல்லுவா வேதா. நாங்க சாதாரணமான ஆட்கள். உங்க ஜான் அங்கிள் மாதிரிதான் எங்களுக்குள்ள அந்த அளவு சாட்சியுள்ள வாழ்க்கை கிடையாது……அவர் சொல்ல
தயவு செய்து அப்படி சொல்லாதீங்க அங்கிள். நான் உங்களை வந்ததுமே பார்த்தேன். நீங்க வந்ததில இருந்து உங்க பொண்ணு மேல்தான் உங்க பார்வை இருந்தது. அப்பயே தெரிந்து கொண்டேன். உங்க பொண்ணு சொன்னது நிஜம்ன்னு….. அவன் சொல்லவும் அவள் தன் அப்பாவை நன்றியுடன் பார்த்தாள்.
சிறிது நேரத்திற்கு முன் வரை அம்மாவையும், அப்பாவையும் திட்டியதற்கு கூட தன் இயேசப்பாவிடம் மன்னிப்பு கேட்டாள்.
ஒரு பொண்ணை அப்பா அப்படித்தான் பார்த்து கொள்ளனும். இதுல எதுவும் விசேஷம் கிடையாதுப்பா….அவர் சொல்லவும்
இல்லை அங்கிள். எனக்கு அப்படிப்பட்ட பாக்கியம் கிடைச்சதில்லை. அதுக்காக நான் பொறாமை பட்டு இதை சொல்லலை. நம்ம இயேசப்பா கூட பைபிள்ல சொல்லி இருக்காங்க. ஒருவன் தன் குடும்பத்தை நடத்த தெரியாமல் இருந்தா, அவன் எப்படி கண்காணியா இருக்க முடியும்னு….. நீங்க உங்க குடும்பத்தை நடத்த தெரிந்தவங்க மட்டுமல்ல ஒரு நேரம் வரும் போது, நம்ம இயேசப்பா கொடுக்க போற ஊழியத்தையும் நடத்த போறவங்க….அவன் சொல்லி கொண்டே போகவும் அவள் கூட ஆச்சர்யப்பட்டாள்.
இன்னொரு விஷயம் தெரியுமா அங்கிள். உங்க பார்வை உங்க பொண்ணு மேல இருந்ததை பார்த்தப்ப, என் இயேசப்பா கூட, தன் பிள்ளைகள் மேல எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கண்ணோக்கமாய் இருக்கிறார் என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்துச்சு….என்று அவன் சொல்லவும்
வேதா….நீயாடா பேசுற. நம்ம இயேசப்பா உண்மையில் உன்னை அவருடைய ஞானத்தினால் அபிஷேகம் பண்ணியிருக்காங்க. நீ இப்படி பேசுறதை எல்லாம் பார்த்தா உங்க அத்தை ரொம்ப சந்தோசப்படுவாங்க. இப்ப உங்க அத்தை வருகிற நேரம்தான்……. ஜான் அங்கிள் பிரமிப்புடன் சொன்னார்.
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக……என்று அவன் சத்தமாக சொல்லவும்
ஆமென்…..இவளும் சத்தமாக சொன்னாள்.
வேதாவின் அம்மாவும் அதை சந்தோசமாக பார்த்து கொண்டிருந்தார். தன் மனதினில் நன்றிகள் சொன்னார் தன் தேவனுக்கு. எல்லாரும் சந்தோசத்துடன் மேரி ஆன்ட்டி மற்றும் அவளுடைய அம்மா வருகைக்காக ஆர்வமாக கேட்டை பார்த்து கொண்டிருக்க உள்ளே நுழைந்தது…..வேதாவின் அப்பா.
எல்லாருடைய முகங்களும் கலகத்தினால் சூழ்ந்தது. ஆனால் அவள் மட்டும் தெரிந்து கொண்டாள்…… இயேசப்பா….இப்ப இங்க ஏதோ உங்களுடைய அற்புத வல்லமை நடக்க போகுதுன்னு மனசுக்கு தோணுது…… மனதினில் சத்தமாக தேவனுக்கே மகிமை உண்டாவதாக……என்றாள் அவள்.
Bible Incidents (for kids) – 33 Bible Incidents (for kids) – 34
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 34
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives