• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 32

    உண்மையில் வந்த கோபத்தில் அந்த நாய் குட்டியை பத்தி விடத்தான் அவளுக்கு தோன்றியது. ஆனாலும் ஏனோ புரிய வில்லை. வீட்டினில் நுழைந்தவள் தனக்கென்று வைத்திருத்த பிஸ்கட்டை கொண்டு வந்து சின்ன சின்ன பீசாக உடைத்து அதுக்கு போட ஆரம்பித்தாள். அதுவும் தன் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தது.

    இவள் நாய்க்கு பிஸ்கட் வைத்து கொண்டிருப்பதை அந்த பாட்டிம்மாவும் பார்த்தார். இவளை பார்த்து சிரித்தார். அவர் இவளிடம் ஏதோ பேச வருவதை போல தெரிந்தது. ஆனா….கதை பேசுவார்களோ….மனதினில் நினைத்து கொண்டாள்.

    எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அந்த பாட்டிம்மாவும் இவள் அருகில் அமர்ந்தார். சப்போஸ் இந்த பாட்டிம்மாவுக்கு நம்ம இயேசப்பா பத்தி சொல்லனும்னு இயேசப்பா நினைச்சிருப்பாரோ….மனதினில் எண்ணியவாறு அந்த முதியவரை பார்த்து சிரித்தார்.

    என்ன பாப்பா படிக்கிற….என்றவாறுதான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.

    நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன் பாட்டி….என்றாவாறு அவளும் பதில் சொல்ல ஆரம்பித்தாள். இப்ப ஸ்கூல் லீவாமா…..என்றவருக்கு ஆமா பாட்டி. இன்னும் ஐந்து நாள் இருக்கு….. என்று சொல்லி கொண்டே இருக்கும் போது, ஒரு கன்றுக்குட்டி தன் தலையை கயிறில் தெரியாமல் மாட்டிக் கொண்டு, தலையை மேலே எழும்ப முடியாமல், தலையை பக்கத்தில் இருந்த கம்பில் முட்டி  கொண்டு நின்று கொண்டிருந்தது.

    இவளுக்கும் கூட என்னவோ போல ஆய்விட்டது. அந்த பாட்டியுடன் இவளும் அந்த தொழுவத்தில் நுழைந்தாள். அந்த பாட்டி அந்த கயிற்று சிக்கலில் இருந்து அதை விடுவிக்க நினைப்பதற்குள் தானே அந்த கன்றுக்குட்டி தன்னை விடுவித்து கொள்ள நினைத்து மீண்டும் சிக்கலை இழுத்து வைத்தது. இரண்டு முறை பாட்டியும் பொறுமையா எடுத்து விட்டு பார்த்தார்கள். இங்கும் அங்கும் ஓடி அந்த பாட்டியின் காலை மிதிக்க வேறு செய்தது. பாட்டியின் முக சுருங்கலை வைத்தே இவள் புரிந்து கொண்டாள். அந்த பாட்டிக்கு அந்த கன்றுக்குட்டியின் பாதங்கள் வலியை ஏற்படுத்தினது என்று. ரெண்டு அடி அதன் தொடையில் கொடுத்தார்கள். அது நிதானமாக இருந்த சமயத்தில் அந்த ரெண்டு நிமிஷங்களில் அந்த கயிற்று சிக்கலில் இருந்து அதை விடுவித்தார்கள். இப்போது அந்த கன்றுக்குட்டியும் ஒழுங்காக நின்றது. உண்மையில் இவள் அதை ஆச்சர்யமாக பார்த்தாள்.

    ஏன் குட்டிமா, பல நேரங்களில் மனிதன் கூட இப்படிதான…..என்று ஆரம்பித்த போது புரியாமல் அந்த பாட்டியை பார்த்தாள்.

    அவள் முகத்தின் மூலமாகவே அவள் எண்ணத்தை தெரிந்து கொண்டவராய், அந்த கன்றுக்குட்டி தன்னை சிக்கலில் இருந்து விடுவிக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டுச்சு பார்த்தியா??? இவளும் தலை அசைத்து ஆமாம் என்பது போல சொன்னாள்.

    மனிதன் கூட அப்படித்தான் குட்டிமா…..சாத்தான் போட்டிருக்கிற சிக்கலை/சோதனையை தெரிந்து கொள்ளாம என்னாலேயே என்னை விடுவிச்சிக்க முடியும்ன்னு நினைச்சி இன்னும் மோசமா அந்த பிரச்சனையால் வேதனைப்படுறது மட்டும் மிச்சம். அந்த சமயத்தில் தான் நம்ம இயேசப்பா ஒரு அடி கொடுத்து, அது வியாதி படுக்கையா இருக்கலாம் இல்லை அவங்க ரொம்பவே நேசிக்கிற ஏதாவது காரியத்தில் வேதனையை கொடுத்து….அவங்க தன்னால் இனிமே ஒரு அடி எடுத்து கூட வைக்க முடியாதுன்னு நினைக்கும் போதுதான்….அந்த பிரச்சனையில் இருந்து முழுமையான விடுதலையை கொடுக்கிறாங்க…… அதுனால நம்ம இயேசப்பா நமக்கு எந்த ஒரு காரியத்தை அனுமதித்தாலும் அது நமக்கு என்றும் நம்முடைய நல்லதுக்குன்னு புரிந்து கொள்ளுற மனசு வேணும் குட்டிமா.

    இது எதுக்காக என்னுடைய இயேசப்பா என் வாழ்கையில் அனுமதிச்சாங்கன்னு ஆராய்ச்சி செய்திட்டு இருக்காம இந்த காரியத்தின் முடிவில் என்னுடைய இயேசப்பா நாமம் மகிமைப்படும் என்பது மட்டுமில்ல…..நான் இன்னும் என் தேவனுக்கு அருகில் நெருங்கி சேர்ந்திருப்பேன்னு மனசில எண்ணம் வந்திருச்சுன்னா கண்டிப்பா எல்லாரும் நன்மைகளை விட பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்க ஆரம்பிச்சிருவாங்க…… அடுத்து இது எனக்கு வேண்டாம்….அது வேண்டாம்….அதுதான் வேணும்….ன்னு நினைக்கிற எல்லா விசயங்களும் மறந்து எப்பவும் அவருடைய ஒவ்வொரு காரியங்களையும் ரசிக்கிற மனசு வந்திரும் குட்டிமா…… சொல்லி விட்டு அவளுடைய முகத்தை பார்த்தார்.

    ஒன்றும் சொல்லாமல் அந்த பாட்டியுடைய முகத்தைதான் பார்த்து கொண்டிருந்தாள். உண்மையில் அவளுக்கு கிடைத்த சவுக்கு அடி போலத்தான் அவளுக்கு தோணியது. தன் தேவன் தன்னை இது வரை அனுமதித்த எந்த காரியமா இருந்தாலும் அந்த செயலில் தான் எத்தனை விசேஷம் தெரிந்தது…..ரொம்பவே அறிவு பூர்வமா….நேர்த்தியா….ஏன் நரகத்தில் இருந்து தப்பித்து வந்த காரியம் முதல்….அப்ப ஏன் நான் என்னுடைய இயேசப்பாவின் ஆலோசனையை ரொம்பவே அவமா நினைச்சிட்டேன்….எனக்கு இன்னும் எனக்குள்ள இருக்கிற மெத்த மேதாவி குணம் போகலைன்னு நினைக்கிறேன்….இல்லாட்டினா என் தேவன் வார்த்தைகளை அழகா தெரிந்து வைச்சிருக்கிறதும் மட்டுமில்ல அவருடைய ஒவ்வொரு செயலையும், கிரியையும் ரசிக்கிற இந்த பாட்டிமாக்கு போய் என் இயேசப்பா பத்தி சொல்ல நினைப்பேனா…..தன்னையே திட்டி கொண்டாள்.

    என்ன குட்டிமா….ஏதோ யோசிச்சுட்டிருக்க நீ. என்றவருக்கு….. அது பாட்டி வந்து….என்னுடைய இயேசப்பா உங்க மூலமா ஒரு அழகான பாடம் சொல்லி கொடுத்திருக்காங்க. அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். என்று அவள் சொன்னாள். சரி நீ சாப்பிடுறியா…என்றவருக்கு இல்லை பாட்டி இப்ப வேண்டாம். இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டுமே….என்றாள்.

    பாட்டி…..என்றவளை பார்த்து சொல்லுமா…...என்ற போது…… இங்க ஒரு மலை உண்டா பாட்டி….என்று கேட்டவளுக்கு.ஆமாம் குட்டிமா. ஒரு பத்து நிமிஷம் நடந்தா ஒரு மலை வரும். ஏன் கேட்கிற….. என்றவருக்கு

    அது….சும்மா தான் கேட்டேன். ரெண்டு வருசத்திற்கு முன்னாடி பார்த்திருக்கேன். இப்பவும் பார்க்க ஆசையா இருக்கு. நான் போயிட்டு வரவா….என்று சிணுங்கி கொண்டே கேட்டவளுக்கு இல்லை என்று அவரால் பதில் சொல்ல முடிய வில்லை.

    போகலாம். ஆனா எனக்கு வேலை இருக்கே. வேலையை போட்டுட்டு அப்படியே என்னால உன் கூட வர முடியாதே…..கொஞ்சம் வருத்ததுடன் சொன்ன போது, இல்லை பாட்டி…நானே போயிக்கிறேன். உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன்…..என்ற போது….நீ மட்டும் தனியாகவா…..வேண்டாம்.அப்படி போறது நல்லது இல்லைமா…. .என்றவரை பார்த்து

    நீங்களே சொல்லுங்க பாட்டி. எங்க ஜான் அங்கிளுக்கு பிரியமான பொண்ணு நான். அப்படி இருக்கும் போது என்னை இந்த ஊர்ல உள்ள யாரு கஷ்டப்படுத்த நினைக்க முடியும்….என்று கெஞ்சி கேட்டவளுக்கு உண்மையை சொல்ல முடியாமல் திணறினார். ஒரு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்படி இருந்தது நிஜம் தான் குட்டிமா. ஆனா இந்த ஒரு மாசமா உங்க அங்கிளுக்கு எதிரா இந்த ஊரே திரண்டு நிற்குதே…. அதுனால உன்னை ஏதாவது அவங்க பண்ணிட்டா நாங்க என்ன செய்வோம்….மனதினில் அவர் நினைத்தாலும் அவளிடம் எதை சொல்லவும் மனம் வர வில்லை. சப்போஸ் பயந்து விடுவாளோ என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது.

    இல்லைமா….இன்னும் கொஞ்சம் நேரம் காத்திரு. நானும் உன்னோட வரேன்….என்ற போது….ப்ளீஸ் பாட்டி…..நான் எங்கயும் போகாம அந்த மலையை மட்டும் பார்த்திட்டு…அங்க இப்ப ஆடு கூட மேய்ச்சிட்டு இருப்பாங்களே…அதை மட்டும் பார்த்துட்டு வந்திறேன்…வேற எங்கயும் போக மாட்டேன்….இது ப்ராமிஸ்…என்ற போது அவர் வேறு வழி தெரியாமல் ஒத்துக் கொண்டார். ஆனாலும் மனதினில் கலக்கம் இருந்தது உண்மை. இயேசப்பா, நீங்கதான் இந்த பொண்ணை உங்க கண்மணி போல பார்த்து கொள்ளணும்….என்று சொல்லி விட்டு….பாதை உனக்கு தெரியுமா…இல்லை நான் காண்பிக்கட்டுமா….என்ற போது

    பாட்டி, என்னை பத்தி பயப்படாதீங்க. என் இயேசப்பா என் கூட எப்பவும் இருக்காங்க. நீங்க என்னை குறித்து கவலைப்படாம உங்க வேலையை செய்திட்டு இருங்க. நீங்க வேலையை முடிக்கிறதுக்குள்ள நான் வீட்டுக்கு வந்திருவேன்…சரியா….என்று சிரித்து கொண்டே சொன்ன போது அவராலும் மறுக்க முடிய வில்லை. சரிமா….பார்த்து போயிட்டு வா….என்று அனுப்பி வைத்தார்.

    தன் கண்களில் இருந்து மறையும் வரை அவளையே பார்த்து கொண்டிருந்தார். நல்ல பெண்ணா இருக்கா. என்னைக்கும் உங்க ஆசீர்வாதம் இந்த பெண்ணோட இருக்கட்டும் இயேசப்பா…. என்று மனதினில் சொல்லி கொண்டார். அடுத்து தன் வேலையில் மீண்டும் ஈடுபட்டார்.

    சுற்றி இருந்த இயற்கை காட்சியை ரசித்து வந்ததில் பத்து நிமிசம் எப்படி போனது என்று அவளுக்ககே தெரிய வில்லை. இதோ மலையை வந்தடைந்து விட்டாள். ரொம்பவும் பெரிய மலை ஒன்றும் கிடையாது. ஒரு பெரிய குன்று என்று சொன்னால் சரி வரும்…. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் மேலே ஏறினாள். யாராவது ஆடு மேய்ப்பவர்கள் தென் பட மாட்டார்களா என்று நினைத்து கொண்டு ஏறினாள். இன்று மலையின் அடி பகுதியில் கூட யாரும் தென்பட வில்லை. உண்மையில் ஆச்சரியம்தான். மலையில் ஏறின போது இயேசப்பாவிடம் இந்த இடத்துக்கு வேண்டாம்னு சொன்ன அந்த நிமிஷத்தில் இருந்து இது வரை நடந்த காரியத்தை எல்லாம் யோசித்து பார்த்தாள்.

    சப்போஸ் வேற இடத்திற்கு போயிருந்தா கூட இந்த அளவுக்கு என் இயேசப்பாவின் அண்மையை ரசித்திருப்பேனான்னு தெரியலை. இயேசப்பா நீங்க என் கூடவே நடந்து வருகிறதை போல எனக்கு தோணுது. அம்மா, அப்பா அருகாமையில் இல்லாம இருந்தது அப்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. ஆனா இந்த சந்தோசத்திற்காகதான் அந்த கஷ்டத்தை நான் உணர வேண்டியதா இருந்ததுன்னு நினைக்கிறேன் பிரெண்ட். இயேசப்பாவிடம் பேசி கொண்டே மலையின் மேல் பகுதிக்கும் வந்து விட்டாள். ஆனா இன்னிக்கி ஏன் யாரும் இல்லை….. மனதினில் கேட்டு கொண்டாள்.

    அதிகமா ரசிக்க வேண்டிய இடம் கூட கிடையாது. மிஞ்சி போனா ஐந்து நிமிஷம் கூட ஆகாது. மேலே இருந்து கீழே காணப்படுற பக்கத்துக்கு ஊரையும் பார்க்கலாம். இவர்கள் இருக்கிற இந்த ஊரையும் ஓரளவுக்கு பார்க்க முடியும். ஆனா சில நேரத்தில் இங்கு பாம்புகள் உலா வருவது உண்டு. அதற்கு பயந்து தான் அந்த பாட்டிமா அப்படி சொல்லி இருப்பார்கள் என்று அவளுக்கு தெரியும்…… அதுனால் தன் அடிகளை பார்த்து பார்த்து தான் வைத்தாள்.

    அவள் அப்படி கவனமாக நடந்து கொண்டிருந்த போதுதான்….. ஊ….ஊ ஊ….. யாரோ ஊளையிடும் சத்தம் போலத்தான் உணர்ந்தாள். அப்ப கனவில் வந்த ஓநாய் தானா…. மனதினில் அவள் நினைத்து கொண்டிருந்த போது தான்…. அந்த பையன் இவள் முன் வந்து நின்றான்….. பார்ப்பதற்கு அவள் வயதை ஒத்தவன் போல தான் தோணியது. ஆனா முகம் மட்டுமில்ல….வாயை ஏதோ கோணலாக வைத்திருந்தான். ஏன்….மனதினில் கேட்டுக் கொண்டாள்.

    ஹாய்….என்று அவனை பார்த்து சொன்ன போது…… அவனும் அவளை பார்த்து சிரித்தவாறே ஹாய்….என்றான். அடுத்த கேள்வியை அவள் கேட்பதற்குள் ஹாய்…..ஹாய்…..ஹாய்….ஹாய்….என்றவாறு மலையின் ஒவ்வொரு பகுதியா நின்று கத்தினான். ஏதோ பிரச்சனை….என்பதை மட்டும் தெரிந்து கொண்டாள். ஏன் இந்த பையன் இப்படி செய்யுறான்….மனதினில் நினைத்தாலும் வெளியே எதையும் காண்பித்து கொள்ள விரும்ப வில்லை. இப்பதான் என் இயேசப்பா எனக்கு ஒரு பாடம் சொல்லி கொடுத்தாங்க. அதுனால யாரையும் நான் தாழ்வா நினைக்க கூடாது….மனதினில் இவள் நினைத்து கொண்டிருக்கும் போதே….அவன் இவள் முன் வந்து நின்னு வித்தியாசமாக சிரித்தான். சிறிதளவு இவளுக்கும் புரிந்து விட்டது.

    உன் பேர் என்ன….என்று கேட்ட அவள் கேள்வியை மீண்டும் அவளிடமே கேட்டான். முழுமையாக புரிந்து விட்டது. புத்தி சரியில்லை என்று. ஆனா இவனை இங்க விட்டுட்டு இவன் அம்மா, அப்பா என்ன செய்யறாங்க. இந்த மாதிரி ஆபத்தான இடத்திலயா இவனை விடுறது….. மனதினில் கேட்டுக் கொண்டு அவனின் அம்மா, அப்பா பக்கத்தில் எங்கயாவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள். வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் தான் வந்திருப்பான் என்பதை யூகித்து கொண்டாள். சரி….நாமும் இங்க இருக்க வேண்டாம்….பாட்டிம்மா வேற என்னை தேடிட்டு இருப்பாங்க. இந்த பையனை அவன் வீட்டில் விட்டுட்டு நாம நம்ம வீட்டுக்கு போக வேண்டியதுதான்…மனதினில் தீர்மானித்து கொண்டாள்.

    மலையில் இருந்து அவனை இறக்குவதற்குள் போதும்..போதும் என்றாகி விட்டது அவளுக்கு. கீழே இரண்டு அடிகள் எடுத்து வைத்து செல்வதற்குள் மீண்டும் மேலே ஓடி விடுவான். திரும்பவும் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டுதான் கீழே இறங்கினாள். அதிகம் பழக்கப்படாத மலை என்பதால் வழுக்க வேறு செய்தது. அப்பாடா…கீழே வந்தாச்சு…என்று அவள் பெருமூச்சு விட்ட போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

    மலையின் அடிவாரத்தில் காணப்பட்ட பெரிய ஓட்டையில் இருந்து வந்த பெரிய பாம்பு அவன் கால்களை கடித்து விட்டு மீண்டும் அதன் பொந்தினில் நுழைந்து கொண்டது. ஐயோ…பாம்பு கடிச்சிருச்சு….சொன்ன பிறகுதான் அவள் கூட பார்த்தாள்.

    பாம்பின் வாலை பார்த்த பிறகுதான் அவன் சொல்லுவது நிஜம் என்பது கூட அவளுக்கு தெரியும். என்ன செய்ய…..என்று அவள் நினைப்பதற்குள் அவன் கீழே மயங்கி விழுந்து விட்டான். உண்மையில் இவளும் மயக்கம் போடாத குறைதான்.

    என்ன செய்ய…என்ன செய்ய….மனதினில் கேள்விகள் வந்ததே அன்றி ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியே அதிர்ச்சியில் நின்றாள். அந்த பையனின் முகத்தை பார்க்கவே முடியாமல் குற்ற உணர்வால் குறுகி நின்றாள். அந்த பையன் மேலயே இருந்திருப்பான். நான்தான் விடாபிடியா கீழே இழுத்துட்டு வந்தேன்.

    ஊர்ல ஓடி போய் பக்கத்தில் இருப்பவர்களுக்கு விசயத்தை சொல்லலாமா….. மனதினில் நினைத்து கொண்டிருந்தாலும் யாராவது இந்த பக்கம் வர மாட்டார்களா அந்த தேடலும் தொடர்ந்தது. ஸ்கூலில் படித்த முதலுதவி பாடங்கள் எல்லாம் பய உணர்ச்சியில் காற்றோடு காற்றாகி போய் விட்டது. யாராவது ப்ளீஸ்…..இங்க வாங்களேன்……அழுகையோடு கதற ஆரம்பித்து விட்டாள். ஒரு உயிர் தன் கண் முன்னாலே போய் கொண்டிருப்பதை அவளால் சகிக்க முடிய வில்லை.

    ஊருக்குள் ஓடி போய் யாரையாவது கூட்டிட்டு வரலாமா….என்ற எண்ணத்தை கூட கைவிட்டாள். அது வரைக்கும் இவனை தனியாகவா விட….. மனதினில் நினைத்தவள் முழங்காலில் நின்று கதற ஆரம்பித்து விட்டாள். இயேசப்பா, ப்ளீஸ்….. இந்த பையனை காப்பாத்துங்க. இவன் உயிரை காப்பாத்துங்க….ப்ளீஸ் பிரெண்ட்……ப்ளீஸ்…..நீங்க என் சத்தத்தை கேட்குறீங்கன்னு இப்ப கூட நம்புறேன்….கதறி கொண்டே சொன்னாள்.

    அந்த நேரத்தில் ரொம்பவே பிரகாசமான ஏஞ்சல் அவள் முன் வந்து நின்றார். யார் என்று அறியும் நோக்கில் அவருடைய முகத்தை உற்று பார்த்தாள். என்றும் அவளோடு பேசும் ஏஞ்சல் இல்லை…இந்த ஏஞ்சல் யாரு…. மனதினில் நினைத்து கொண்டிருக்கும் போதே…..

    குட்டிமா…நான் உன்னுடைய இயேசப்பாவால அனுப்பப்பட்ட ஏஞ்சல். இது வரைக்கும் உனக்கு தெரிந்தா போதும். சொல்லுமா. இப்ப என்ன செய்யணும்…. என்று கேட்ட ஏஞ்சலை அப்படியே பார்த்து கொண்டிருந்தாள்.

    தன் நிலையை உணர்ந்தவளாய், ஏஞ்சல்…இந்த பையனை பாம்பு கடிச்சிருச்சு. இவனை காப்பாத்துங்க….என்று சொல்லி மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள்.

    தன் கையில் ஒரு பெரிய பட்டயத்தை எடுத்தவர், அந்த பட்டயத்தால் அந்த பையனை நோக்கி ஓங்க ஆரம்பிக்க….இடையில் மறித்தவளாய் ஏஞ்சல்….இவனை காப்பாத்த சொன்னா….நீங்க….அவள் சொல்லி கொண்டிருந்த போது…நீ உன் இயேசப்பாவை நம்புறியா….. என்ற போது ஆமா ஏஞ்சல். முழுமையா நம்புறேன். ரொம்பவே தீர்க்கமா சொன்னாள்.

    இவன் உயிர் மட்டும் தப்பிக்க படணும்ன்னு நினைக்கிறியா…இல்லை இவன் முழு புத்தியும் குணமாகி நம்ம இயேசப்பா ஊழியத்தை செய்கிற ஆளா இருக்கணும்னு ஆசைபடுறியா….. என்று கேட்டதும்...என்னுடைய இயேசப்பாவின் ஊழியனா ஆகணும்னு…..உடனே சொன்னாள்.

    அப்ப நீ அமைதியா இரு குட்டிமா….என்று சொன்னவர் ஓங்கி அவன் மேல் அந்த பட்டயத்தை ஓங்கின போது, அவனில் இருந்த பொல்லாத பிசாசு…. இல்லை….ஒண்ணும் என்னை செய்யாத….என்ற அலறிய படி வெளியே வந்தது.

    பார்க்கவே ரொம்பவே கொடூரமாய், கரிய நிறத்தில், எது எங்கு இருக்கு என்று தெரிந்து கொள்ள முடியாத வண்ணம் முழுமையா கரிய முடியால் மூடி இருந்தது. ஆனால் அத்தனை பெரிய பூதம் அந்த ஏஞ்சலின் முன்பு ரொம்பவே பயந்து போய் நின்றது. அந்த பூதம் வெளியே வரவும், அந்த பையனும் கண்களை திறந்தான். தன் முன்னால் நிற்கும் அந்த பெரிய ஏஞ்சலையும், கரிய உருவத்தை பார்த்தவாறு எழுந்தான்.

    பக்கத்தில் ஒரு பெண்ணும் நிற்பதை ஆச்சர்யமாக பார்த்தான். தேவனாகிய கர்த்தரின் நாமத்தினால் பாதாளத்திற்கு போ…… என்று அந்த ஏஞ்சல் சொன்னது தான் தாமதம் அலறி கொண்டு அந்த பூதம் பறந்து போவதை இருவரும் பார்த்தனர். 

    குட்டிகளா, உங்க தேவன் உங்களுக்கு செய்த இந்த அதிசயத்தை என்றும் மறக்காதீங்க. நம்ம தேவன் உங்களை மாதிரி உள்ள சின்ன பிள்ளைகள் மேல ரொம்பவே பிரியமா இருக்கிறாங்க. நீங்க தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அவருடைய ஊழியத்தை செய்வதற்காக பிரிக்கப்பட்ட சந்ததி. இதை என்றும் மறந்து போகாதீங்க. ஆனா இங்க நடந்த காரியங்களை காலம் வரும் வரைக்கும் சொல்வதற்கு நம்ம தேவன் அனுமதி தரலை. நம்ம தேவன் அதிசயமானவர். அவரை என்றும் தொழுது கொள்ளுங்க….உண்மையில் கெர்ச்சிக்கிற சிங்கம் போல அவருடைய குரல் இருந்தது.

    சொல்லி கொண்டு இருக்கும் போதே, அந்த ஏஞ்சல் மறைந்து போனார். இருவரும் தங்கள் முழங்காலில் நின்று தன் தேவனை துதித்தனர். இருவரும் எழுந்து நின்றவர்கள்…..நான் உங்களை பார்த்தது இல்லையே….என்று அந்த பையன்தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான். நான் ஜான் அங்கிள் வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி….என்று சொல்லியவள் தன் பெயரையும் சொன்னாள்.

    என் பேரு வேதா…..என்று சொன்னவன் பேசி கொண்டே நடக்க ஆரம்பித்தான். நான் கூட இந்த ஊர்ல எனக்கு பிரெண்ட்ஸ் இல்லையேன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இன்னிக்கி என் இயேசப்பா உன்னை என் பிரெண்டா கொடுத்திருக்காங்க…..தேங்க்ஸ் lord சொன்னாள் அவள். எனக்கும் கூட அப்படித்தான். தேங்க்ஸ் இயேசப்பா….அவனும் சொன்னான்.

    ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்…..என்றவாறு சொல்லி கொண்டு சிரித்து கொண்டே நடந்தனர். அவன் தான் சந்தித்த சுவையான நிகழ்ச்சிகளை சொல்லி கொண்டு வந்தான். அவள் கூட தன் ஸ்கூலில் நடந்த சில காரியங்களை சொல்லி கொண்டே வந்தாள்.

    இருவரும் ஊருக்குள் நுழைந்து விட்டனர். அவர்கள் இருவரையும் பார்த்தவர்கள் உண்மையில் வாய் அடைத்து போய் நின்றனர். ஏன் என்ற உண்மையை தெரிந்திருந்தாலும் இருவரும் வெளியே எதையும் காண்பித்து கொள்ளாமல் அவளுடைய வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். உனக்கு என்ன தோணுது வேதா, உனக்கு கிடைத்த இத்தனை பெரிய அதிசயத்தை நினைக்கும் போது…… அவள் கேட்ட போது…

    என் தேவன் பெரியவர்….அது மட்டுமில்ல என்னை நேசிக்கிற தேவனும் கூட….சொல்லி விட்டு ஆமென் என்று அவன் சொல்லவும் அவளும் சேர்ந்து சொன்னாள் ஆமென். தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கே என்றென்றும் மகிமை உண்டவாதாக….என்று அவள் சொன்னவுடன் அல்லெலூயா…..என்று அவன் சொன்னான் சத்தமாக. இவர்கள் அருகில் போனவர்கள் எல்லாரும் இவர்களை விநோதமாக பார்த்தனர்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − two = 3

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>