• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 15

    பிண வாடை அதன் இடமிருந்துதான் வந்ததை அவள் தெரிந்து கொண்டாள். அதன் விரல்களில் இருந்த நகம் அவளுடைய கைகளை குத்தி அவள் சதையை பிய்த்து கொண்டிருந்தது.

    இது கனவில்லை. என்னால என்னுடைய வலியை உணர முடியுதே. அப்ப நான் உண்மையிலேயே நரகத்திற்குத்தான் போயிட்டு இருக்கேனா….

    மனதில் கேள்விகள் முட்டி மோதின. அந்த குட்டி பிசாசின் விரல்களில் இருந்த நீண்ட நகம் வேறு வேதனைபடுத்தி கொண்டிருந்தது.

    பிரெண்ட்சோட விளையாடும் போது, தவறுதலா நகம் பட்டாலே கத்தி கூப்பாடு போடுவேன். பேசமா முகத்தை திருப்பி வைச்சிருக்கிறவ நான். ஆனா இப்ப இந்த பிசாசு என்னை இத்தனை தூரம் வேதனைபடுத்தி கூட்டிட்டு போகும் போது, ஒண்ணும் சொல்ல முடியலை. எனக்கு வேணும் இது. நான் ரேஷ்மிக்கு செய்த தப்புக்குதான் இந்த தண்டனை நியமிக்கப்பட்டிருக்கு. எனக்கு இது தேவையானதுதான்………

    கண்களில் இருந்த கண்ணீர் இன்னும் வடிந்து கொண்டிருந்தது. ஏதோ சொன்ன காரியத்தை செய்கிற ரோபோட் போலத்தான் அந்த பிசாசு செயல்பட்டு கொண்டிருந்தது. அந்த குட்டி பூதத்தின் மேல் இருந்த கவனத்தை எடுத்து இப்போதுதான் தான் சென்று கொண்டிருந்த பாதையில் வைத்தாள். என்றும் அவள் பார்க்கும் தெரு, மார்கெட் எல்லாவற்றையும் அவளால் பார்க்க முடிந்தது. தான் செய்த தப்புக்கு இனிமே நரகம்தான் தண்டனைங்கிற உண்மையை அவள் மனம் ஏற்றுக் கொண்டதால் பிடிவாதம் கூட பிடிக்க அவளுக்கு தோன்றவில்லை.

    அம்மா, இனிமே உங்களை என்னால பார்க்க முடியாது. நான் உங்களை ரொம்ப கஷ்டபடுத்தி இருக்கேன். சப்போஸ் ரேஷ்மிக்கு பிரச்சனை என்னாலதான் நேர்ந்திச்சுன்னு தெரிந்தா நீங்க எவ்வளவு வேதனைப்படுவீங்கன்னு எனக்கு தெரியலைமா. ஆனா ஒண்ணும் மட்டும் என்னால உணர முடியுது. கண்டிப்பா என்னை மாதிரி ஒரு பிள்ளையை பெற்றதற்காக கண்டிப்பா ரொம்பவே மனம் உடைந்து போயிருவீங்க. அதை நேர்ல பார்க்கிறதை விட இந்த வேதனை எவ்வளவோ பரவாயில்லைமா. சாரிமா, உங்க முன்னாடி என்னால ஒரு குற்றவாளியா நிற்க முடியாது.

    இவள் முரண்டு பண்ணுவதை நிறுத்தியதால் அந்த பூதம் கூட ஆச்சர்யப்பட்டது. வாயை திறந்து அதன் கோரமான பற்களை காட்டினதோடு சரி. ஒன்றும் இவளோடு பேசவில்லை. மூக்கிற்கும், வாயிற்கும் கூட வித்தியாசம் தெரியமுடியாத அளவிற்கு முழுவதும் முடியினால் மூடப்பட்டிருந்தது.

    அழகான இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டே வந்தவளுக்கு தீடீரென்று பாதை ரொம்பவும் கரடு முரடாக போகவும் சிறிது பயம் எட்டி பார்க்க ஆரம்பித்தது. உண்மையில் அவள் இது வரை ரசித்த காரியங்கள், இயேசப்பா ஏஞ்சல் மாதிரி இவங்களால கூட என்னை பறக்க வைக்க முடியுதே……அம்மா சொன்ன மாதிரி நரகம் ஒண்ணும் அந்த அளவு பயங்கரமானதா இருக்காது போல……நல்ல பாதையில்தான் இந்த பூதம் கூட்டிட்டு போயிட்டிருக்கு…….

    ஆனா தீடீர்னு பாதை ரொம்பவே முரண்படவும் விக்கித்து போனாள். ரொம்பவே இருட்டான பாதை……எந்த பொருளையும் கண்ணால பார்த்து கண்டறிய முடியாத அளவுக்கு இருட்டு. ஆனால் அந்த தடுமாற்றமான பாதையிலும், அந்த பூதம் இவள் கைகளை விட வில்லை. பல நேரங்களில் அந்த பூதம் நின்று சுற்றி முற்றி பார்த்து கொண்டது. உண்மையில் அதன் செய்கை இவளுக்கு ரொம்பவே விநோதமாக தெரிந்தது.

    ஏன்……பாதை எதுவும் மறந்து போச்சோ…..அந்த நேரத்திலும் கிண்டல் மனதில் எழும்ப தன்னை தானே திட்டி கொண்டாள். ஏற்கனவே செய்த தப்புகே அந்த நரகத்தில் என்ன தண்டனை காத்திருக்கோ….இதுல இன்னும் பிரச்சனையை இழுத்து வைக்க நான் ரெடி இல்லை……மனதினில் நினைத்து கொண்டாள்.

    ஏதோ மனதினில் முழுமையும் சோகம் வடிந்ததை அவளால் உணர முடிந்தது. அவளுடைய அம்மாக்கு தெரியாது சில நேரம் சினிமா பார்த்த போது, ஏதாவது சோகமான சீன் பார்க்கும் போது, இதே மன வேதனைதான் தோன்றியது என்பதுதான் அந்த நேரம் கூட அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அதை விட அவளை பாதித்த காரியம், நரகத்தில் நாம செய்த தப்புகள் ரொம்பவே ஞாபகத்திற்கு வந்து வேதனைப்படுத்துறதுதான் மிக பெரிய கொடுமைன்னு அவள் அம்மா சொன்ன காரியம்தான் அது.

    எதுவாக இருந்தாலும் நான் அனுபவித்துதான ஆகணும், மனதை தேற்றி கொண்டாள். இப்ப ரொம்பவே இருட்டு………எந்த பாதையின் வழியா வந்தோம், போய் கொண்டிருக்கிறோம் என்பதை கூட தெரிய முடியாத படி, சுற்றிலும் இருட்டு.

    வெளியே தெரிந்த இருட்டை விட, ரொம்பவே இருட்டான பள்ளத்தை அந்த இருட்டிலும் அவளால் உணர முடிந்தது. ஏதோ ஒரு இருட்டான பள்ளத்தின் வழியா இறங்குவதை போலவே தெரிந்தது அவளுக்கு.

    அந்த இருட்டிற்குள் வந்ததும், அந்த பூதத்திற்குள் எங்கிருந்துதான் குஷி வந்ததோ ரொம்பவே வேகமாக அவளோடு பறக்க ஆரம்பித்தது. ஏன்…….மனதினில் கேட்டு கொண்டாள். சப்போஸ்…..நரகம் வந்திருச்சோ…….முதன்முதலாக பயத்தை உணர்ந்தாள்.

    அந்த பூதத்தின் பிடி கூட சிறிது தளர்ந்ததாக உணர்ந்தாள். இந்த நேரத்தில் தப்பிச்சிர்லாமா……கேட்ட அடுத்த நொடியே……இந்த இருட்டில் எங்க போய், நான் தப்பிக்க………சோர்வடைந்தவளாய் அதன் பின்னாலே நகர்ந்தாள். இப்போது அந்த பூதம் நடக்க ஆரம்பிக்கவும், இப்போனாச்சும் கையை விடுமா என்கிற எண்ணம்தான் முதலில் அவளுக்கு தோன்றியது.

    காலின் கீழ் ஏதோ ஊருவது அவளுக்கும் புரிந்தது. அந்த பூதத்திடம் கேட்க தோன்றியது. இதென்ன இயேசப்பா ஏஞ்சலா…….நான் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க……….

    பார்த்து நடந்து வா……… கால் கீழ் அந்த பெரிய பாம்புதான் கிடக்குது…….. கடிச்சிர போகுது. சொன்னவுடன் துள்ளி குதித்தாள். என்னது பாம்பா!!!…..என்னை கடிச்சிர போகுது!!!!…..அந்த இருட்டிலும், அங்கும், இங்கும் ஓடினாள்.

    அவளின் பயத்தை பார்த்து கை கொட்டி ரசித்தது அந்த பூதம். சிரித்த முகமாய் இருந்த அந்த பூதம் தீடீரென்று முகத்தை கடுமையாக்கினதை அவளும் அதன் சுவாசத்தை வைத்தே கண்டு கொண்டாள். ஓடுவதை நிறுத்தி விட்டு அதன் பக்கத்தில் வந்து நின்றாள். என்ன ரொம்பவேதான் பயப்படுற…….இந்த பெரிய பாம்புக்கே பயப்படுற…..அங்க உனக்கு இதை விட பெரிய பாம்பு உன் உடம்புக்குள் போயிட்டி போயிட்டி வெளியே வரப் போகுது……அப்பயும் இப்படி தான் துள்ளி குதிப்பியா…….பேசாம என் பின்னால வா………

    உள்ளுக்குள் பயம் எட்டி பார்த்தது. அம்மா, இதை பத்தி எல்லாம் ஒண்ணும் சொல்லவே இல்லையே…….நரகத்தில எல்லாரும் கதறுவாங்க, இயேசப்பா கூட இல்லாதாதால், அது ரொம்பவே வேதனையா இருக்கும்….அங்க இருந்து வெளியே வர முடியாது…..இந்த மாதிரிதான் சொன்னாங்க. ஆனா இந்த பூதம் என்னமோ சொல்லுது. பாம்பு உள்ள போயிட்டு வெளியே வந்து…..ஒண்ணும் புரியலை.

    கால்களை பார்த்து பார்த்து வைத்தாள். ஏதோ காலில் இடறிக்கொண்டே தான் இருந்தது. அளவில் மட்டும் வித்தியாசமாய். எல்லா பாம்பும் இங்கதான் கிடக்குது. இந்த மாதிரி தாவி தாவி எத்தனை தூரம் வரப்போற……ஒழுங்கா நடந்து வா…….அதன் குரலால் அதட்டவும் நடுங்கி போனாள். அப்ப கால் கீழ் கிடக்கிறது எல்லாம் பாம்புகளா………பயத்தில் காலை ஓங்கி வைத்த போது, ஒரு பாம்பு கோபத்தில் அதன் தலையை உயர்த்தி இவளுடைய காலை கடித்து விட்டது. அவ்வளவுதான் கத்தி பயத்தில் மயக்கமானாள்.

    முகத்தில் எதையோ ஊற்றவும் திரும்பவும் அலறி கொண்டு எழுந்தவள் முன்பு, கூட்டமாக அந்த பூதத்தை போலவே நிறைய அவளை சூழ நின்றது. இவள் எழுந்தவுடன் எல்லாம் மொத்தமாக இவளை பார்த்து இளக்காரமாக சிரித்தது. பயத்தில் திரும்பவும் மயங்கிய மாதிரி நடித்தாள். இல்லைன்னா தன்னை எல்லாம் சேர்ந்து அடித்திருமோங்கிற பயம்தான் அதற்கு காரணம். ஆனால் காதை மட்டும் திறந்தே வைத்தாள்.

    என்னடா…..இந்த பொண்ணு அடிக்கடி மயக்கம் போட்டு விழுது…..ஒரு பூதம் மற்ற பூதங்களை பார்த்து கேட்கவும்

    என்ன இருந்தாலும் இந்த பொண்ணு மேல நாம எதுவும் செய்ய முடியாது. நம்ம மாஸ்டர் வந்து, இவளுக்கு என்ன தண்டனைன்னு சொல்லுற வரைக்கும் கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும்…..

    நமக்குள்ள பொறுமையா……ஒரு பூதம் எகத்தாளமாக சிரித்தது.

    என்ன நேற்று கிடைச்ச தண்டனை உனக்கு போதாதா……ஒன்று இதை பார்த்து சிரித்தவாறு கேட்கவும்

    ஆமா, ஏதோ நான் மட்டும் தண்டனை வாங்கின மாதிரி பேசுற. எல்லாரும்தான அடிக்கடி அந்த சாத்தான்கிட்ட தண்டனை வாங்குறோம். புதுசா பேச வந்துட்ட……

    மீண்டும் ஒன்று போல எல்லாம் சிரித்தன.

    ஆமா, அந்த ஒரு வயதான பாட்டிமா. உன்கிட்ட அந்த சாத்தான் அனுப்பி வைச்சிருக்கே. என்னமாதிரி தண்டனை அந்த பாட்டிக்கு………

    அதை ஏன் கேட்குற. பூமியில் வாழுற வரைக்கும் யாருக்கும் எந்த ஈகையும் செய்யாம பணத்தை எல்லாம் மூடி மூடி அந்த பாட்டி வைச்சிருக்கு. யாரயும் தன்கிட்ட அண்டவும் விடலை. நல்லவங்க சாபம் சும்மாவா விடும். இங்க நரகத்தில வந்து கஷ்டப்படணும் அதன் தலையில் எழுதி இருக்கு. யாரால அதை மாற்ற முடியும்.

    இன்னும் அந்த பாட்டிக்கு என்ன தண்டனைன்னு சொல்லவே இல்லையே…… ஒன்று முந்தி கொண்டு கேட்கவும்

    என்ன தண்டனை கிடைக்க போகுது. ஒரே ஒரு தேவனாகிய கர்த்தரை மறந்துட்டு பணத்தை ஒரு விக்கிரமாக வணங்கிய தப்புக்கு தண்டனை என்னன்னு உங்களுக்கு தெரியுமே……..

    மண் சகதியில் தீ எழுப்புற கந்தக மத்தியில வாழுறதுதான் அந்த தண்டனை………ஒன்றின் குரல் ரொம்பவே திடமாக வந்தது.

    ஏய் அந்த அழுக்கு சகதியையா சொல்லுற…..ஒன்று ஆர்வ கோளாறில் கேட்கவும்

    என்ன எதுவும் தெரியாத மாதிரி கேட்குற…….மீண்டும் ஒன்று போல சிரித்தனர்.

    புறணி பேசுறது, குறை கூட்டமா உட்கார்ந்து பேசுறது……இது கூட சாத்தானின் காரியத்தில் இருந்துதான் வந்ததா…..அப்ப பெண்கள் நிறைய பேரு இன்னும் இதே மாதிரி செய்யுறாங்களே. அப்ப அவங்களும் இந்த இடத்திற்கே வர வேண்டியதா இருக்குமோ……கண்களை மூடி கொண்டிருந்தவளின் எண்ணங்களில் தேவையில்லாத காரியங்கள் ரீங்காரமிட்டது. உடல் உஷ்ணத்தில் தகிப்பது அவளால் உணர முடிந்தது. அந்த தாங்கலை பொறுக்க முடியாதவளாய் நெளிந்தாள். அவள் நெளிவதை கண்டதும், பேச்சை நிறுத்திக் கொண்டன.

    ஏய் அங்க பாரு. அந்த பொண்ணு எழுந்துட்டா போல……..ஒன்று கூவவும்

    அடுத்த நொடியே எல்லாம் அவளை மொய்த்து கொண்டன. கண் திறந்தால் ஆபத்து மனம் சொல்லவும் மீண்டும் மூடி கொண்டாள்.

    என்னடா இது…….இந்த பொண்ணு இன்னும் எழும்பலை. இன்னும் எவ்வளவு நேரம் காத்திட்டு இருக்க…..வேண்டாவெறுப்பாய் ஒன்று சிணுங்கவும்

    என்ன துரை ரொம்பவே சினுங்குறார். நம்ம வேலையே இதுதான…..

    ஆனா, இந்த மாதிரி சும்மா உட்கார்ந்திருக்க முடியாது என்னால. அடுத்த இடத்தில் என்ன நடக்குதுன்னு பார்க்க வேண்டாமா…….ஒன்று அங்கே இருந்து புறப்பட்டது……மற்றவை அதை பார்த்து சிரித்தது.

    ஏய்….பார்த்து, பார்த்து. எங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரிந்து கொள்ளாட்டின்னாதான் தலையே வெடிச்சிருமே. பார்த்து போ. அந்த சாத்தான்கிட்ட தேவையில்லாம மாட்டிக்காத…..எச்சரித்தன மற்றவை.

    அதெல்லாம் நான் பார்த்துக்குவேன். நீங்க பயப்பட வேண்டாம்……சிரித்து கொண்டே சென்றது.

    அவள் கால்கள் வீட்டில் தரிக்கிறதில்லை. சிலவேளை வெளியிளிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள் தோறும் பதிவிருப்பாள்.

    பைபிள்ளில் இருந்த வார்த்தை அவளுக்கு இப்போதுதான் மனதில் உரைத்தது. அப்ப இந்த மாதிரி ஆவிகளை கொண்டவங்கதான் வீட்டில் நிற்காம அலைந்து கொண்டே இருப்பாங்களோ……

    மனதில் நினைத்த போதே, சே….இது வரைக்கும் கொலை, கொள்ளை, திருட்டு, விபச்சாரம் இது மட்டும்தான் தப்புன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்ப பார்த்தா, புறணி பேசுறது, மற்றவர்களுக்கு உதவியா இருக்காம பணத்தை மறைச்சு வைக்கிறது, மற்ற வீட்டில நடக்கிற விசயங்களை அறிஞ்சுக்க ஓடுற கால்கள் கூட தப்புகள்ன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

    அந்த பூதம் நகரவும் மற்றவை மீண்டும் பேச ஆரம்பித்தது.

    நீ இன்னும் எனக்கு அந்த  கந்தக சகதியை பார்த்து சொல்லவே இல்லை…..ஒன்று குறைபட்டு கொண்டது. காதுகளை கூர்மையாக்கி கொண்டாள்.

    உனக்கு இன்னும் அதை பத்தி தெரியாதா……ஒன்று கேட்கவும்

    நான் எங்க போய் அந்த இடத்தை பார்த்தேன். எனக்குதான் வேற இடத்தில வேலையே…….அது சொல்லவும்

    அந்த மண் சகதியில புழுக்கள்தான் கூட்டமா இருக்கும். ஏற்கனவே கந்தக தீ. இதுல அந்த புழுக்கள் ஒருத்தனுடைய உடம்பில எல்லா பகுதிகளிலும் உள்ள துளை போட்டு உள்ளே போய், வெளியே வந்து, அவங்க மாம்சத்தை சாப்பிடும். அவங்க உடம்பெல்லாம் துளை போட்ட மாதிரிதான் இருக்கும். இது ஏதோ ஒரு நாளோ, குறிப்பிட நாட்களோ கிடையாது. தொடர்ந்து இந்த சித்திரவதை இருந்துட்டேதான் இருக்கும். உடம்பு அந்த கந்தக சகதியில் ஒரு பக்கம் வெந்திட்டு இருக்க, இந்த பூச்சியின் அட்டகாசம் இருக்கே, சொல்ல முடியாது. சில சகதியில் பெரிய பெரிய பாம்புகள் கூட இருக்கும். அவை உடம்பில் உள்ள போய் வெளியே வந்தா என்ன ஆவாங்க. அந்த வேதனையில் அவங்க கதற சத்தம்தான் நாம என்னைக்கும் கேட்குறமே…….ஒன்று சொல்லி முடிக்கவும்

    உண்மையில் காதையையும் மூடி கொண்டால் நல்லா இருக்கும் போல……மனதினில் நினைத்தாள். கேட்ட விசயத்தை யோசித்து பார்க்க முடியாது திணறினாள். கேட்கிற எனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, அவள் இந்த வேதனையை இப்போது அனுபவிக்கிற பாட்டியை நினைத்து பார்த்தாள். கண்கள் முன்பு அந்த காரியம் ஓடியது.  உடல் ஒரு நிமிடம் தூக்கி அடிக்கவும், திணறி போனாள்.

    அதற்குள்………..நம்ம மாஸ்டர்கிட்ட இருந்து எங்களுக்கு தகவல் வந்திருக்கு. நாங்க கிளம்புறோம். இரண்டு பூதங்கள் மட்டும் இவளுக்கு துணை இருக்க, மற்றவை கிளம்ப தயாராக இருந்தன.

    அப்பாடா….என் உடம்பு நடுங்கினதை அவங்க பார்க்கலை. தப்பித்தேன். பெருமூச்சு விட்டாள். நினைத்து கொண்டிருந்த போதே, ரொம்பவே கூர்மையான ஒரு ஈட்டி அவள் முதுகை பதம் பார்த்தது. வலியில் அலற தோணியது. இருந்தும் மூச்சு விடாமல் அழுகையை அடக்கினாள். கத்தி விட்டால் பெரும் ஆபத்து என்பதுதான் அவளுக்கும் தெரியுமே……

    என்னடா இப்படி பண்ணின… அவ மேல கை வைக்கிறதுக்கு நம்ம மாஸ்டர் நமக்கு அனுமதி கொடுக்காதப்ப நீ ஏன் இப்படி செய்த……ஒன்று கோபப்பட்டு கேட்டது.

    கண்களில் கண்ணீர் வந்ததை மறைத்தாள்.

    அப்பவே இருந்து தூங்கிட்டு இருக்கா. உண்மையில் தூங்கிட்டு இருக்காளா இல்லை சும்மா நடிக்கிறாளான்னு பார்த்தேன்………வேற ஒண்ணும் இல்லை….சொல்லி விட்டு சிரிக்கவும் மற்றவை சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பின.

    அந்த வலியிலும் அவளில் ஒரு நிம்மதி பெருமூச்சு. அப்பாடா …..இப்போதைக்கு இரண்டு பூதம்தான் இருக்கு. நினைத்து கொண்டிருந்த போதுதான் ஒரு பெரிய அலறல் சத்தத்தை கேட்டாள். தீயில் துடிக்கிற வேதனையை போலதான் தெரிந்தது அவளுக்கு.

    அந்த சத்தம் யாரது……..அவள் பக்கத்தில் இருந்த ஒரு பூதம் கேட்கவும்

    அதுவா…..ஒரு குழந்தையை கொன்னுட்டு இந்த நரகத்திற்கு வந்தவன்தான் இப்படி கத்துறான்…….சொல்லி கொண்டிருந்த வார்த்தையை கேட்டதும் இன்னும் காதை கூர்மையாக்கினாள். மனதில் என்னுடைய கதையை போல இருக்குதே…….நினைத்து கொண்டாள்.

    ஆனால் அடுத்து அவை காரியங்கள் சொல்ல சொல்ல கேட்டு கொண்டிருந்தவள் உண்மையில் வியர்த்து போனாள். இயேசப்பா……..நான் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். இயேசப்பா…..இயேசப்பா…..மனதினில் கதற ஆரம்பித்தாள். எத்தனையோ மணி நேரங்களுக்கு பிறகு தன்னுடைய தேவனை அவளையே மறந்து அழைத்தாள் என்பது பாவம் அவள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எவ்வளவுதான் தடுத்தாலும் அந்த பூதங்கள் பேசிக் கொண்டிருந்த காரியங்கள் அவள் காது கேட்டு கொண்டுதான் இருந்தது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − 4 = one

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>