• இயேசு கிறிஸ்து யார்?(47)

    கல்லான இருதயம்

    rock

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    என்ன குட்டிகளா, நமது தேவன் வழி போன்ற இருதயத்தை கொண்ட நமக்கும் எத்தனை அழகாக கிருபை பாராட்ட வல்லவர்ன்னு தெரிந்து கொண்ட போது, அவருடைய கிருபாசனதண்டை ரொம்பவே தைரியமா சேர்ந்திருப்பீங்கன்னு நம்புறோம். உங்களுடைய சந்தோசம் என்றும் நம்ம தேவனுக்குள் நிறைவா இருக்க நமது தேவன்தாமே கிருபை பாராட்டுவாராக, ஆமென்.

    இப்ப நம்ம இயேசப்பா கல்லான இருதயம் கொண்டவர்களுக்கு என்ன வார்த்தைகள் சொல்ல போறாங்கன்னு தெரிந்து கொள்ளுவோமா?

    நம்ம தேவன் நமக்கு கொடுத்த வேதாகமத்தில கல் என்கிற விஷயம் ரொம்பவே அழகான காரியம். ஏன்னா ஆதியாகமத்தில் ஆரம்பிச்சு வெளிப்படுத்தின விசேஷம் வரை நம்ம தேவன் அழகான காரியங்களா இந்த கல்லை பற்றி சொல்லி இருப்பாங்க. அதுவும் ரொம்பவே விசேஷமான காரியங்களுக்கு. ஏன் தீடீர்னு கல்லை பற்றி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னு கூட நீங்க யோசிக்கலாம்.

    ஆதியாகமம் புத்தகத்தில, பாபேல் என்கிற இடத்தை பற்றி வாசித்திருப்பீங்க. அந்த இடம் ரொம்பவே வரலாற்று சிறப்புமிக்க இடம். ஏன்னா, அதற்கு முன்ன வரை(சப்போஸ் ஆதாம், ஏவாள் காலத்தில இருந்து) கல்லுகளால் ஆன விடுகளில் வாழ்ந்த நம்ம முற்பிதாக்கள் , செங்கல்லும், நிலக்கீலும் வைத்து, வானத்தை அளாவும் கோபுரத்தை கட்ட ஆசைபட்டது இந்த இடத்தில்தான். ஆனா அவர்களுடைய எண்ணங்களை அறிந்த தேவன், அவர்கள் பேச்சுக்களை குழம்ப பண்ணி, புது புது பாஷைகளை உண்டாக்கினது இந்த இடத்துலதான். அது மட்டுமில்ல அவங்க மனதில தோணின காரியங்களுக்குத்தான். அதுனால கல் – செங்கல் என்கிற காரியம், பாஷைகள் வருவதற்கு காரணமா இருந்துச்சுன்னு சொன்னா சரி வருமா குட்டிகளா.

    அடுத்து நம்ம யாக்கோபு கூட, நான் என்னுடைய தேசத்திற்கு திரும்பி போக நீங்க கிருபை பாராட்டினா, தேவா நான் வைத்த கல் உம்முடைய வீடாகும்ன்னு வைத்து, அந்த இடத்திற்கு பெத்தேல்ன்னு பெயர் வைத்தாரு. அது மட்டுமில்ல, நாம இப்பவும் நம்ம தேவனை கனம் பண்ணுகிற தசம பாகம் என்கிற காரியத்தையும் அந்த இடத்தில்தான் முதன்முதலில் ஆரம்பிச்சு வைச்சாரு.(ஆபிரகாம் தனக்கு எதிர் கொண்டு வந்த சாலேம் ராஜாவுக்கு, தன் மன உந்துதலால் சந்தோசத்தோட எல்லாவற்றிலும் தசம பாகம் கொடுத்தார். ஆனா முதன் முதலில் பொருத்தனை பண்ணி நம்ம தேவனுக்கு தசம பாகத்தை பலியா செலுத்தினவர் யாக்கோபு).

    எகிப்தில நம்ம தேவன் அனுமதித்த கல் மழையில இருந்து, நம்ம தேவன் தனக்கு வெட்டப்படாத கல்லினால் உருவாக்க சொன்ன பலிபீடம், யோசுவாவிடம் இஸ்ரவேல் மக்கள் சொன்ன வாக்கு, நாங்க எங்க தேவனையே சேவிப்போம்ன்னு சொன்னதிற்கான சாட்சி, கோலியாத்தை தோற்கடிக்க தாவீது use பண்ணின கல், நம்ம இயேசப்பா கல்லுகளினால் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை கொடுக்க வல்லவராய் இருக்கிறார்ன்னு சொன்ன வார்த்தை, நம்ம இயேசப்பாவை சாத்தான் கல்லுகளை அப்பங்களாகும்படி சொன்னது, பேதுருவை பார்த்து இந்த கல்லின் மேல் என் ஆலயத்தை கட்டுவேன்ன்னு நம்ம இயேசப்பா சொன்னது, தன்னை ஆகாதென்று கல்லா எண்ணினாலும் வீட்டின் மூலைக்கு தலைக்கல்லா தான் ஆகப்போகுறதை குறித்து அப்ப இருந்த மூப்பர்களிடம் சொன்னது…… வரை. இப்படி எல்லா காரியங்களிலும் கல் என்கிறது ரொம்பவே முக்கியமானதா இருந்திருக்குன்னு சொன்னா ஒத்துக் கொள்ளுவீங்களா.

    சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா ஏன் இந்த கல்லுகளை பற்றி சொல்லிட்டு இருக்காங்கன்னு யோசித்திட்டு இருக்கலாம். உங்களுக்கு தெரியுமா குட்டிகளா, நம்ம தேவன் நம்மளை கூட விலை ஏறப்பட்ட கல்ன்னு நினைச்சி நல்ல ஈவுகளை எதிர்பார்த்து காத்திருக்க, நாம உண்மையில் செய்கிற காரியம் என்ன தெரியுமா? நம்ம இயேசப்பாவை கல்லான இருதயம் கொண்ட நாம, என்றும் நம்ம பக்கத்தில வர விடாம கல் மாதிரி காயப்படுத்திட்டு இருக்கிறோம். புரியலையா குட்டிகளா?

    எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

    மத்தேயு 23 : 37     

    என்ன குட்டிகளா, இந்த வார்த்தைகள் இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமா நம்ம தேவன் கொடுத்த வார்த்தை. இஸ்ரவேல்ன்னா நமக்கு நல்லாவே தெரியுமே, கல்லான இருதயம் கொண்டவர்கள். அதுனால, கல்லான இருதயம் கொண்ட நாம கூட நம்ம தேவன் அவர் நம்மளை, அவருடைய அன்புக்குள் கூட்டி சேர்க்க ஆசைபட்டாலும், கல்லெறிகிற நிலையில் தான் இருக்கிறோம். அவர் அனுப்பின தீர்க்கதரிசிகளை கொலை செய்து, அனுப்பப்பட்டவர்களை(தேவ வார்த்தைகளை கொண்டு செல்லுகிறவர்கள்) கல்லெறிகிறோம்ன்னா, அவர்களை நமக்காக அனுப்பின நம்ம தேவனைதான நாம கல்லெறிகிறோம்ன்னு அர்த்தம். இப்ப புரிந்திருக்கும் குட்டிகளா உங்களுக்கும்.

    கல்லான இருதயம் நமக்குள் இருக்கிறதால நம்ம தேவனுக்கு எவ்வளவு பிரச்சனைன்னு இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும். இப்ப கல்லான இருதயமா இருந்தாலும், நமக்குள்ளயும் தன் வார்த்தைகளை நம்ம இயேசப்பா விதைக்கும் போது, என்ன நடக்குதுன்னு அவர் சொல்ல கேட்போமா?

    கல்லான இருதயத்தில் நம்ம இயேசப்பா தேவ வார்த்தைகளை விதைக்கும் போது, மண் அதிகமா இல்லாத காரணத்தினால் ரொம்ப சீக்கிரமாகவே செடி வளர்ந்திருமாம். யெஸ் குட்டிகளா, நாம நம்ம தேவனுடைய வார்த்தைகளை கேட்கிற நேரத்தில், உண்மையான இருதயத்தோட கேட்காம, வெறும் அதிசயங்களுக்காவும், அற்புதங்களுக்காகவும் மட்டுமே, நம்பி கேட்கும் போது, அந்த வார்த்தைகள் கூட நமக்குள் கிரியை செய்ய முடியுமாம். இதை நம்ம இயேசப்பா சந்தோசமா இல்லை குட்டிகளா, வேதனையோட சொல்லுகிறார்.

    சப்போஸ் நம்ம தேவனுடைய ஆலயத்திற்கு சரியான நேரத்தில போய் சேர்ந்தாச்சு. ரொம்ப சந்தோசம். ஏன்னா, இன்னைக்கி சரியான நேரத்தில நம்ம தேவனின் பிரசன்னம் காண வந்துட்டோம்ன்னு ஒரு தேங்க்ஸ். ஆலயத்தில் முதல் பெஞ்சுல உட்கார்ந்ததால, தேவ வார்த்தைகளை ரொம்பவே பக்கத்தில கேட்க முடிந்ததுக்கு இன்னும் ஒரு  தேங்க்ஸ் நம்ம இயேசப்பாக்கு சொல்லிட்டோம். ஆராதனையில ரொம்பவே பரவசமாய் தேவனை ஆராதிக்கிறோம். தேவ வார்த்தைகள் அடங்கிய பாடலை பாடும் போதே, பாடும் போதே, என் தேவா உம மகுத்துவங்களை பாட இன்னும் ஓர் ஜென்மம் வேண்டும்னு ரொம்பவே உருக்கமாய் பாடல். பாடல் முடிந்ததும், நம்ம தேவ வார்த்தைகளின் விளக்கங்களையும் எந்த பக்கமும் வேடிக்கை பார்க்காம கேட்டோம். பிரசங்கம் நடுவில, தேவ பிள்ளைகளால் சொல்லப்பட்ட சாட்சிகள் இருக்கே, அதை நம்ம இருதயத்தை ரொம்பவே தொட்டிருச்சு. வாவ்…..என்னுடைய தேவன் எவ்வளவு பெரியவர், அந்த ஊழியருடைய வாழ்கையில என்ன அதிசயமாய் நடத்தி இருக்காரு. அவருக்கு வந்த பிரச்சனைகளை என்ன அழகாக தீர்த்து வைச்சிருக்காரு. அது மட்டுமா, அவருடைய கையால எத்தனை பேரு இன்னைக்கி சுகமானாங்க.

    எனக்கு கூட கண்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கு. அந்த ஊழியர்கிட்ட ஜெபம் பண்ணினா நல்லா இருக்கும். மனதில எண்ணம் வர, ஊழியர்கிட்ட ஜெபமும் பண்ணியாச்சு. உங்க இருதயத்தில நீங்க நம்ம தேவன் எனக்கு செய்து தருவாருன்னு, கொண்ட நம்பிகையால, கண் பிரச்சனையில இருந்து விடுதலையும் கிடைச்சிருச்சு. என்ன அழகான ஒரு ஆண்டவர், என் ஒரு அதிசயமான ஆண்டவர்……சாட்சியும் அத்தனை பேருக்கு முன்னாடி சொல்லவும் செய்தாச்சு குட்டிகளா.

    இப்ப நாம நம்ம வீட்டுக்கு போறதுக்காக பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம். தேவ கிருபையால் பஸ் சீக்கிரமா வந்துருச்சு. கூடுதலா ஒரு தேங்க்ஸ் நம்ம இயேசப்பாக்கு சொல்லிட்டு, பஸ்ல ஏறியாச்சு. நம்ம இடம் வந்ததும் பஸ்ல இருந்து இறங்கவும் செய்தாச்சு. இப்பதான் பார்க்கிறோம். நம்ம பர்ஸ் காணாம போயிருச்சு. அன்னைக்கின்னு பார்த்து, வீட்டு வாடகைக்கி கட்ட வைச்சிருந்த ரூபாயும் தவறுதலா, அதில இருந்தது தெரியாம சர்ச்சுக்கு கொண்டு போயிட்டோம். மொத்தமா சொன்னா கொஞ்சம்தான், ஒரு 10000 ருபாய் மிஸ்ஸிங். என்ன செய்வோம் குட்டிகளா. அங்கயே கத்தி ஒரு மாநாடு போட்டிர மாட்டோம். இன்னிக்கின்னு பார்த்துதான் நான் அந்த ஊழியர்கிட்ட ஜெபம் பண்ண போகனுமா……கண் பிரச்சனை சரியாகமே இருந்திருக்கலாம். ஏன் இன்னைக்கி முதல்லயே சர்ச்க்கு போனேன். லேட்டா போன இத்தனை நாட்களில் நடக்காத பிரச்சனை இன்னிக்கின்னு பார்த்து வந்துருச்சே……

    இது வரை சூழ்நிலைகளை குற்றம் சொன்ன நாம 2 நாள் காத்திருந்து பார்ப்போம். அதுவும் ரொம்பவே ஊக்கத்தோட, ஜெபத்தொட கண்டிப்பா இயேசப்பா, நீங்க இன்னைக்கே என் பிரச்சனையை தீர்த்து வைச்சிருவீங்க. பாருங்க, இன்னைக்குள்ள ஒருத்தர் வந்து, உங்க பர்ஸ்சை கொண்டு வந்து, நான் உங்க பர்ஸை பார்த்தேன், இந்தாங்கன்னு கொடுத்துருவாங்க. நான் நம்புறேன். என்னுடைய இயேசப்பாவை. அந்த ஊழியர் கூட சொன்னாரே, என்னுடைய தேவனால் எல்லாம் கூடும்னு. கண்டிப்பா கடிகாரத்தை பார்த்துட்டு ஒவ்வொரு நொடி போகுறதையும் கணக்கில் எடுத்து உட்கார்ந்திருப்போம். யாராவது வந்துற மாட்டாங்களா…..நேரம் முடிஞ்சிருச்சு. அப்ப கூட, நைட் நேரத்தில் கதவை தட்டி, என் தேவன் அற்புதம் செய்ய வல்லவர்ன்னு எண்ணம். ஆனா விடியற்காலையில் நம்ம எல்லா நம்பிக்கைகளும் வடிந்து போன பிறகு, நம்ம இயேசப்பாவை பார்த்து சொல்லுவோமே ஒரு வார்த்தை, இது வரை உங்களை நான் நம்பினது என்னுடைய தவறு. இனிமே நீங்க யாரோ……நான் யாரோ….உங்களை நம்பினதிற்கு நல்ல தண்டனை கொடுத்திட்டீங்க. குட் பை….

    என்ன குட்டிகளா, ரொம்பவே ஆச்சர்யமா பார்க்குறீங்க. இப்படி கூட நடக்குமான்னு உங்களுக்கு தோணலாம். கண்டிப்பா இந்த உலகத்தில இதே மாதிரி எத்தனையோ இடங்களில் நடந்துட்டுதான் இருக்கு……ஏதோ கற்பனை கதைகளை சொல்லுறதுக்கு நம்ம தேவன் ஒண்ணும் சாதாரண மனுஷன் கிடையாது. நம்மளை படைத்த தேவன். கல்லான இருதயம் கொண்ட நாம எவ்வளவு சீக்கிரம் அவரை நம்ம இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுறோமா , அவ்வளவு சீக்கிரமாய் ஒரு பிரச்சனைன்னு வந்ததும், அவரை தூக்கி எரிஞ்சிருவோம். இதுல என்ன கொடுமைன்னா, தேவ ஆவியானவர் வழி நடத்தலை பெற்ற பெரிய ஊழியர்கள் கூட இதுல அடக்கம். நம்மில் யாராவது அன்னைக்கி யோபு சொன்ன மாதிரி

    தேவன் கையிலே நன்மையை பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ…..

    யோபு 2 : 10

    நம்மால் சொல்ல முடியுமா குட்டிகளா. யோபு மனைவி சொன்ன மாதிரின்னா ஈஸியா சொல்லிருவோம். சரியா?

    பஸ்ல பர்ஸ் காணாம போறது மட்டுமில்ல, ஒரு இன்டர்வியூ முடிவை ரொம்பவே எதிர்பார்த்து கிடைக்காம போயிருக்கலாம். இல்லை வேலை உயர்வுக்காக காத்திருந்து, நம்மளுக்கு சுத்தமா பிடிக்கதாவர்க்கு அது போயிருக்கலாம், கல்யாணம் வரை வந்து, தீடீர்னு முறிந்து போன கல்யாண சம்பந்தமா இருக்கலாம். இப்படி எத்தனையோ விசயங்கள்…..

    ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது(நீதிமொழிகள் 24 : 10)ன்னு நம்ம தேவன் சொல்லி கொடுத்தது உண்மைதான். நமக்கும் தேவையான மண்(விசுவாசம்) இல்லை என்கிற காரியத்தானால நம்ம பெலவீனம், எந்த தேவனை வாயார புகழ்ந்தோமோ, அவரை பற்றி நம்ம மனதில் மட்டுமில்ல, மற்றவங்ககிட்டயும் வசை(திட்ட) பாட ஆரம்பிச்சிருவோம். அவன் முன்னிலைமையிலும், பின்னிலைமை ரொம்பவே மோசம்னு சொன்னா சரி வருமா?

    உடனே உங்களுக்கு ஒண்ணு தோணலாம். எதற்கு இந்த வேதனை? எங்க இயேசப்பா எங்களுக்கு இந்த மாதிரி சோதனைகள் கொடுக்காட்டி நாங்க அவரை மறுதலிக்க போறோம். எவ்வளவு சந்தோசமா, அவரை துதிச்சிட்டே இருப்போம். சரிதான் குட்டிகளா, அதாவது நாம சொல்லுறதை பார்த்தா, ஒரு அழகான, ரொம்பவே விலை உயர்ந்த டிரஸ்சை நான் சகதி உள்ள இடங்களில் போட்டு போக வேண்டியதா இருக்கு. ஆனா ஒரு மண் சகதி கூட என்னுடைய டிரஸ்லையோ இல்லை என் உடம்பிலையோ படாம வரணும்னு சொல்லுற மாதிரி இருக்கு. அப்படிபடாம வந்தாதான், அப்படி வர வைச்சாத்தான் அவர் என் உண்மையான இயேசப்பா. இல்லைன்னா இப்படித்தான் திட்டுவோம்ன்னு சொல்லுற மாதிரி இருக்கு.

    நம்ம இயேசப்பா நம்மகிட்ட நிறைய முறை சொல்லி கொடுத்துட்டாங்க. இந்த பூமி உனக்கு ஒண்ணும் சொகுசு பேருந்து கிடையாது. சோதனை கூடம். இதுல நீ வெற்றி பெற்றா மட்டுமே பரலோக வாசம். இல்லைனா என்றும் நரக வேதனை. அதுனால நம்மளை நம்ம தேவன்கிட்ட போக விடாம தடுக்கிற அந்த சோதனைகளை வெற்றி பெற்று ஜீவ கீரிடத்தை வாங்குற எண்ணத்தை விட்டுட்டு, ஏன் இந்த தேவையில்லாத எதிர்ப்பார்புகள் குட்டிகளா. சப்போஸ் சோதனைகள் வந்தாலும், அது நம்ம தேவனை இன்னும் நெருங்கி சேர்க்க வைக்க சாத்தானே அனுப்புற பாலம்ன்னு ஏன் நினைக்க கூடாது.

    உடனே நீங்க மனதில நினைக்கலாம். பேசுறதுக்கு எல்லாருக்கும் சுலபம். ஆனா வலியில வேதனைபடுரவங்களுக்கு தான் அது தெரியும், அது பாலமா இல்லை ரயில் தண்டவாளமா……சாரி குட்டிகளா, உங்களை வேதனைப்படுத்தி பார்க்க நம்ம இயேசப்பா இதை சொல்லலை. இந்த உலகத்தில தேவனுக்கு ஏற்ற நல்ல இருதயம்ன்னு பாராட்ட பெற்ற தாவீது கூட சோதனையில் விழுந்து, காயம் அடைந்து, எல்லாத்தையும் இழந்தவர் தான். ஆனா அந்த நல்ல இருதயம் வருவதற்குள்ள நம்ம தேவன், அவரை அப்படி வனைந்ததால என்றும் நம்ம தேவனின் சமூகத்தில பாட முடியுது, நான் உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்னு. தாவீதுடைய இருதயத்தை மாற்ற முடிந்த, நம்ம தேவனால ஏன் நம்ம கல்லான இருதயத்தை மாற்ற முடியாதா?

    எனக்கு என் தேவன் அனுமதிக்கிற சோதனை, அவரோட நான் சந்தோசமா, பரலோகத்தில இருக்க வைக்கிறதுக்காகதானே! கண்டிப்பா உதவி செய்யவும் அவர் வல்லமை உண்டு.

    எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்,

    மத்தேயு 6 : 13

    நம்ம இயேசப்பா அவர்கிட்ட பேசுறதுக்கு நமக்கு சொல்லி கொடுத்த அழகான ஜெபம். எங்களை தயவு செய்து சோதனைக்கு உட்பட பண்ணிறாதீங்க. உங்களுடைய செல்லங்கள்தான நாங்க. சப்போஸ் இதுல நான் என்னுடைய பலவீனத்தினால் கடந்து போக நேரிட்டாலும் தயவு செய்து என்னை காத்து கொள்ளுங்க, உங்க அன்பின் ரத்தத்தினால். நீங்க எனக்காக சிந்தி இருக்கிற இரத்தத்தை தயவு ஞாபகம் வைச்சுகோங்க, ப்ளீஸ்…………..

    என்ன குட்டிகளா, உங்க முகத்தில ரொம்பவே சந்தோசத்தை பார்க்க முடியுது. இந்த நம்பிக்கை போதும் குட்டிகளா, நம்ம தேவனுக்கு. என்றும் நம்ம தேவனுக்குள் வளர அவர்தாமே கிருபை பாராட்டுவாராக. நமது தேவனாகிய கர்த்தருக்கே என்றென்றும் துதியும், கனமும், மகிமையும் உண்டாவதாக, ஆமென்.  

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    2 × five =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>