• பெற்றோரின் ஆசீர்வாதம்

    ஒரு வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் நான்கு வயது பேரனோடு தன் மனைவி மரித்துப்பின் வாழ்வதற்கு போனார். அவர் தள்ளாத வயதின் காரணமாக கண்கள் மங்கியதாகவும், நடை தள்ளாடுவதாகவும், கரங்கள் நடுங்கியபடியும் இருந்தது.

    .

    அந்தக் குடும்பம், தினமும் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். இந்த வயதானவர், கண்கள் மங்கியதாகவும், கைகள் நடுங்கியபடியும் இருந்ததால், கையிலிருந்த உணவு கீழே விழுவதும், டம்ளரில் இருந்த பால் மேஜை விரிப்பின் மேல் விழுவதாகவும் இருந்தது. அது மகனுக்கும் மருமகளுக்கும் தொந்தரவாக இருந்தது. மகன் ஒரு நாள் சொன்னான், ”இந்த வயதானவர் பண்ணுகிற காரியஙகள், என்னை பாதிக்கிறது. அவர் உண்ணும்போது வரும் சத்தமும், கீழே போடும் உணவுகளும் இந்த இடத்தை அழுக்குப்படுத்தி விடுகின்றன. இதற்கு ஏதாவது ஒரு காரியம் செய்தே ஆக வேண்டும்” என்று தன் மனைவியிடம் கூறினான்.

    .

    அதன்படி, அவர்கள் அந்த அறையில் ஒரு மூலையில் அவருக்கென்று ஒரு மேஜையைப் போட்டு, அதில் அவரை அமர்த்தி சாப்பிடவும், மற்றவர்கள் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடவும் செய்தார்கள். அவர் பீங்கான் தட்டுகளை உடைத்ததால், அவருக்கு மரத்திலான தட்டு ஒன்றும் சாப்பிட சொடுத்திருந்தார்கள். அவர் அங்கு தனியே சாப்பிடும்போது அவர் கண்களில் கண்ணீர் வருவதைக் குடும்பத்தினர் கண்டனர்.

    .

    இதையெல்லாம் நான்கு வயது பேரன் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு சாப்பிடுவதற்கு முன் அவன் அங்கிருந்த மரக்கட்டையை வைத்து ஏதோ பண்ணிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவன் தந்தை ‘மகனே நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என்றுக் அன்பொழுகக் கேட்டார். அதற்கு அந்த நான்கு வயதுச் சிறுவன், ‘அப்பா நீங்களும் அம்மாவும் வயதாகும்போது சாப்பிடுவதற்கு இந்த கட்டையிலிருந்து தட்டுகளை செய்துக் கொண்டிருக்கிறேன்’ என்றான். அதைக் கேட்ட அத்தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த இரவிலிருந்து வயதான தகப்பன் திரும்ப எல்லாரும் சாப்பிடும் மேஜைக்கு அழைத்துவரப்பட்டு அவர் முடிவுகாலம் வரை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார். இப்போது அவர் சாப்பிடும் சத்தமோ, மேஜையின் மேல் விழும் பாலோ எதுவுமே அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

    .

    பிரியமானவர்களே, நம் பெற்றோர் வயதாகும்போது அவர்களை வைத்து பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் கடமையுமாகும். சபைக்கு கொடுக்கும் பணத்தையும் பெற்றோருக்கு செலவு செய்யும் பணத்தையும் கணக்கு வைக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

    .

    இன்று எத்தனை பெற்றோர் முதியோர் இல்லத்தில் விடப்படுகிற அவல நிலைமை! அந்தப் பெற்றோரிடம் கேட்டால் சொல்லுவார்கள், ‘எங்களுக்கு எதுவும் வேண்டாம், எங்கள் பேரப்பிள்ளைகள் வளருவதை பார்க்க வேண்டும், அவர்களை கொஞ்சி வாழ்வதே எங்களுக்கு போதும்’ என்று கண்ணீரோடு சொல்வார்கள். ஆனால் அவர்கள் அப்படி, வீடுகளில் இல்லாதபடி, அவர்களை வேறோரு இடத்தில் மற்றவர்கள் பராமரிப்பில் வைப்பது எத்தனைக் கொடுமை!

    .

    வீட்டில் உள்ள பெற்றோரை நாம் நடத்தும் முறை சில வேளைகளில் மிகவும் துயரத்தை வரவழைப்பதாக உள்ளது. மேலை நாடுகளில் கைகால் விழுந்துப் போன பெற்றோரை ஆஸ்பத்திரியில் போய் தள்ளிவிட்டு திரும்ப போய்க் கூட காணாத பிள்ளைகள் எத்தனைப பேர்!

    .

    உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே என்ற வேதம் அறிவுரை கூறுகிறது.

    .

    பெற்றோரின் ஆசீர்வாதம் மிக முக்கியமான ஆசீர்வாதமாகும். மூத்த மகனுக்கென்று கொடுக்கப்படுகிற ஆசீர்வாதம் பழைய ஏற்பாட்டில், இது சேஷ்ட புத்திர பாகத்தின் ஆசீhவாதமாகும் அதை ஏசா அசட்டை பண்ணி, ஒரு கோப்பை சிவந்த கூழுக்காக அதை யாக்கோபிற்கு விற்றுப்போட்டான். ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவிரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்ளூ அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான் என்று எபிரேயர் 12: 16,17ல் பார்க்கிறோம். பெற்றோர் ஆசீர்வதித்து, தங்கள் வாழ்பில் முன்னுக்கு வந்திருப்பவர்கள் அநேகர். அதே பெற்றோரின் சாபத்தினால் குடும்பம் நல்ல முறையில் வாழ முடியாதவர்களும் சபிக்கப் பட்டவர்களும் எத்தiயோப் பேர்! நம் கண்கூடாக பார்க்கிறோம். பெற்றோரின் மனதைக் குளிரப் பண்ணுவோம். ஆசீர்வாதங்களைப் பெறுவோம். தன் பெற்றோரை நேசிப்பவர்களை தேவனும் நேசிக்கிறார். ஆமென்!

    .

    வேத வசனம்:
    —————–

    உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. – (நீதிமொழிகள். 23:22).

    .

    Original Source From: anudhinamanna.net

    Related Post

    Categories: சிந்திக்க சில விசயங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    nine − = 5

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>