• இயேசு கிறிஸ்து யார்?(27)

    அவரே(இயேசு கிறிஸ்து) வழி, சத்தியம், ஜீவன்

    jesus27

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம இயேசப்பா நமக்கு ஆவியில எப்படி எளிமையா இருக்கணும்னு கற்றுக் கொடுத்தாங்க. நமக்கு கண்டிப்பா அது ரொம்பவே பிரயோஜனமா இருந்திருக்கும்னு நம்புறோம் குட்டிகளா. ஏன்னா , நம்ம தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு ஜீவன். மத்தேயு புத்தகத்தில நம்ம இயேசப்பா, தேவனுடைய வார்த்தைகளை குறித்த விளக்கத்தை மலை பிரசங்கத்தில ரொம்பவே அழகாக சொல்லியிருப்பாங்க. உங்களுக்கு பிடித்த பகுதியா இருந்தாலும், அதையும் தாண்டி விளக்கங்களை தெரிந்து கொள்ள நீங்களும் ரொம்ப நாளாகவே காத்திருந்திருப்பீங்க, சரியா. ஆனா நம்ம தேவன் கிருபை பாராட்டி அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தை நமக்கு நம்ம இயேசப்பா மூலமா சொல்லி கொடுக்கும் போது ரொம்பவே சந்தோசப்படுறீங்கன்னு எங்களுக்கும் புரியுது குட்டிகளா.

    நம்ம இயேசப்பா, ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது, என்ற வார்த்தைக்கு கொடுத்த அர்த்தம் உண்மையில உங்க இருதயத்தை தொட்டிருக்கும்னு நம்புறோம். இது வரைக்கும் நாம எதற்காக வாழுறோம்னு தெரியாம இருந்த நம்மளுகுள்ள நம்ம ஆத்துமாவின் வாஞ்சையை குறித்து சொல்லி கொடுத்து, அவர் நமக்கு கொடுத்த ஆவியை குறித்தும் கவனம் தேவைன்னு நம்ம இயேசப்பா சொன்னப்ப உங்களுக்கு என்ன தோணுச்சு? எனக்குள்ள இத்தனை காரியங்கள் உண்டா?ன்னு முதலில் ஆச்சர்யமா இருந்திருக்கும். அதற்கும் மேல இந்த உலகத்தில நாம எதை நோக்கி ஓடணும்னு என்கிற திடம் கிடைச்சிருக்கும்னு நம்புறோம். அதை விட மேலா நம்ம தேவனுடைய வார்த்தைகளில் இத்தனை பொருள் உண்டான்னு கூட தோணிருக்கலாம், சரியா குட்டிகளா.

    நம்ம தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஏன் அப்பத்திற்கு இணையா நம்ம இயேசப்பா சொன்னாங்கன்னு இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும் குட்டிகளா. நம்ம இயேசப்பா கூட தன்னை பற்றி சொன்னப்ப நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன்ன்னு சொல்லியிருக்காங்க. நம்ம இயேசப்பாவை பற்றி அவருடைய அன்பான சீசன் யோவான்(I யோவான்) சொல்லும் போது, தேவனிடத்தில இருந்து வந்த வார்த்தைதான் நம்ம இயேசப்பா ன்னு அழகாக சொல்லிருப்பாங்க. அது மட்டுமில்ல, ஆதியாகமம் முதல் அதிகாரத்தில கூட நம்ம பிதாப்பா இந்த உலகத்தை படைக்கிற நேரம், வார்த்தையால் தான் வானத்தையும், பூமியையும், இதுல இருக்கிற அனைத்தையும் உருவாக்கினாங்கன்னு(சொன்னார், உண்டாயிற்று) அழகாக சொல்லபட்டிருக்கும். யோவான் தன்னுடைய புத்தகத்தில்(யோவான்) சொல்லும் போது, உலகத்தில உண்டான அனைத்தும் அவர் மூலமா உருவாயிற்றுன்னு சொல்லி இருப்பாங்க. அதாவது நம்ம பிதாப்பா, இந்த உலகத்தையும், அதில இருக்கிற அனைத்தையும், தன் வார்த்தையாகிய நம்ம இயேசப்பா மூலமாதான் படைத்தாங்க.

    இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும் குட்டிகளா. ஏன் நம்ம இயேசப்பா தன்னை வழின்னு சொன்னாங்க. ஏன்னா நம்ம இயேசப்பாவை விசுவாசிக்கிறது மூலம்தான் நம்மளால் பரலோகத்தை பற்றி யோசிக்கவே முடியும். இந்த பூமியை நம்ம இயேசப்பா ஒரு சோதனை கூடம்தான் சொல்லுவாங்க. ஏன் தெரியுமா குட்டிகளா, நம்ம குடியிருப்பு இந்த பூமி கிடையாது. நம்ம இயேசப்பா நம்மளை தன்னிடமிருந்து இந்த பூமிக்கு அனுப்பினது, நாம நம்ம தேவன் நமக்குன்னு நியமனம் பண்ணியிருக்கிற வேலையை, அவருடைய சித்தத்தை செய்து முடித்து திரும்பவும் அவர்கிட்ட போறதுதான் நம்ம வாழ்க்கை. இந்த பூமிக்கு நாம வரும் போது நம்ம முற்பிதாவான ஆதாம் மூலமா நமக்குள் அனுப்பப்பட்ட, பாவத்தின் விஷத்தை கொன்று, சாத்தானை ஜெயித்து, வெற்றி வாகை சூடி, திரும்பவும் பரலோக வீடு திரும்பத்தான் அவரால அழைக்கப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு புரியலைன்னு நீங்க எங்களை பார்க்கிறதில இருந்து புரியுது குட்டிகளா.

    நம்ம அம்மா/அப்பா தினமும் வேலை செய்துதான் நம்மளை காப்பாற்றுகிறாங்க. சரிதான குட்டிகளா. ஆனா தான் வேலை பார்க்கிற ஆபீஸ்தான் தன்னுடைய வீடுன்னு அங்கேயே வாழ்றாங்களா? இல்லை, அப்படித்தான. காலையில வேலைக்கு போனா, மாலை வீடு திரும்பிருவாங்க. ஆமா, உண்மைதான். இதுல என்ன பிரச்சனை இருக்கு? இது நித்தமும் எல்லார் வீட்டுலயும் நடக்கிற காரியம். ஆனா நீங்க சொன்ன பரலோகம் தான் நம்ம வீடு என்பதற்கும், எங்க அம்மா/அப்பா வேலை பார்த்திட்டு வீடு திரும்பறதுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க கேட்ட கேள்வி சரியான கேள்வி குட்டிகளா. ஆனா நம்ம இயேசப்பா இதன் மூலமா என்ன சொல்ல வர்றாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?

    நம்ம அம்மா/அப்பாக்கு அவங்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் அங்க இருந்தாலும், சாயங்காலம் வந்தவுடன் நம்மளை தேடிதான ஓடோடி  வராங்க. ஆபீஸ்ல எத்தனைதான் வித விதமா சாப்பாடு இருந்தாலும், அந்த நொடி கூட அவங்களுக்கு தன்னுடைய பையனோ/பொண்ணோ ஸ்கூல்ல ஒழுங்கா சாப்பிடாங்கலான்னு, எண்ணங்கள் மட்டும் நம்மளை பற்றி மட்டும்தான் இருக்கும். அதுவும், நமக்கு ஒரு வேளை , உடம்பு சரியில்லாம இருந்து, நம்மளை ஸ்கூல் விட வேண்டிய நிலைமை வந்துருச்சா, அன்னைக்கி அவங்க மனதில படுகிற பாடு, சொல்லி முடியாது குட்டிகளா. ஆபீஸ்ல யார் பேசுற வார்த்தையும் அவங்க காதில கேட்காது, எந்த ஒரு வேலையும் சரியா செய்ய முடியாம அவங்களுடைய ஞாபகம் உங்களை மட்டுமே யோசிக்கிறதால அத்தனை காரியங்களிலும் தப்புகள் வந்து, முதலில் ஆபீஸ்ல வேலை பார்க்கிற தன்னுடைய நண்பர்கள்கிட்ட கிண்டல் பேச்சு வாங்கி, அடுத்து அங்க உயர் அதிகாரிகள்கிட்ட ஏச்சுகள் வாங்கி……..சொல்ல வார்த்தைகள் கிடையாது குட்டிகளா. நம்மளை நல்ல படியா பார்த்துக் கொள்ள அவங்க மனதிலயும், உடலிலும் படுகிற வேதனைகள் அதிகம்.

    என்ன குட்டிகளா, அமைதியாயிட்டீங்க. நம்ம அம்மா/அப்பா நமக்காக படுகிற பாடுகள் கொஞ்சம் கூட தெரிந்து கொள்ளாம, எத்தனை நேரங்களில் அவங்க வார்த்தையை உதாசீன படுத்திருக்கோம்னு தோணுதா? நம்ம அம்மாமார்கள் வேலைக்கு போறவங்களா இருந்தாலும், இல்லை பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வீட்டிலேயே இருக்கிறவர்களா இருந்தாலும், அவங்க மனது உங்களைதான் முழுமையா தேடும் குட்டிகளா. அதுனால இனிமே என்றாவது அம்மா நம்மளை திட்டுறாங்கன்னு நினைச்சி எதிர்த்து பேச துணியும் போது, உங்களுக்கு என் மேல அன்பே இல்லைன்னு வார்த்தை மட்டும் சொல்லிறாதீங்க. ஏன்னா அந்த வார்த்தை அவங்க இருதயத்தை கிழிக்கும் என்கிற உண்மை மட்டுமில்ல குட்டிகளா, நாமளும் ஒரு தகப்பன்/தாய் ஸ்தானத்திற்கு வரும் போதுதான், நம்ம பிள்ளைகள் நம்மளை காயப்படுத்தும் போது தான் நமக்கும் புரியும். தெரியாம அவங்களை காயப்படுத்திட்டேனேன்னு.

    அம்மா/அப்பா, குடும்பம் இப்படி எல்லா காரியமும் நம்ம தேவன் நமக்காக விதித்திருக்கிற ஒரு அழகான கட்டமைப்பு. இதுல உங்க வாழ்க்கை முழுவதும் சந்தோசமா இருங்க. சப்போஸ் சில குறைகள் அதற்குள் இருந்தாலும், அது நமக்காக, நம்மளுடைய நல்லதுக்காக தேவன் நியமித்தது. அந்த குறைகள் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்தினா, நம்ம உண்மையான நண்பன் இயேசப்பாகிட்ட அதை சொல்லி, அவர் மேல பாரத்தை தூக்கி வைச்சிருங்க. நீங்க அதை தூக்கிட்டு அலையாதீங்க.

    அம்மா/அப்பா இவங்களுடைய உறவும், அன்பும் உங்க வாழ்நாள் முழுவதும் வரக்கூடியது. அதுனால உங்க வாழ்கையில ஒரு கட்டம் வரும் வரை அவங்க வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டியது நம்ம தேவன் நமக்கு கொடுத்திருக்கிற கட்டளை. அடுத்து நமக்குன்னு ஒரு துணையை கொடுக்கும் போது, அதை குறித்த தேவனுடைய தீர்மானம் எதுவோ, அதன் படி செய்யுங்க. அம்மா/அப்பா மேல வைச்சிருக்கிற பாசத்தையும், துணை மேல தேவன் வைக்க சொன்ன அன்பையும் என்றும் போட்டு குழப்பிக்க கூடாது என்பது தான் தேவனுடைய வார்த்தை.

    ஏன்னா நம்ம தேவன் ரொம்பவே அன்பான தேவன். எவ்வளவுன்னா தன்னுடைய ஒரே பையனையே நமக்காக பலி கொடுக்கிற அளவுக்கு. அதுனால நம்மளையும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பா இருக்கத்தான் அழைத்திருக்கிறார். அதுனால எனக்கு இவங்களை தான் பிடிக்கும், இவங்க மேல மட்டும்தான் அன்பா இருப்பேன். அவங்க என்னை கஷ்டப்படுத்திட்டாங்க, அதுனால என் வாழ்நாள் முழுவதும் முகத்தை திருப்பிக்குவேன்னு வாழ சொல்லலை. நம்ம தேவன் நமக்கு கொடுத்த, இப்பவும் நம்மகிட்ட பேசிட்டு இருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் அன்பை மட்டுமே சொல்லக் கூடியது. அதுனால இந்த அன்பை மட்டுமே போதிக்கிற நம்ம இயேசப்பா என்கிற வார்த்தையை நாம விசுவாசித்து, அவர் பாதையா(வார்த்தையா) இருந்து நம்மளை நடத்தும் போது, அவர் என்னோடு கூட இருக்கிறார் என்ற திடத்தில வாழ்ந்து நாம பரலோகத்தை அடைய முடியும் குட்டிகளா.

    இப்ப புரியுதா குட்டிகளா, நம்ம இயேசப்பா தன்னை ஏன் வழி ன்னு சொன்னாங்கன்னு. அவரை நாம் விசுவாசிக்கிற விசுவாசம், அதுதான் நம்மளை கஷ்டப்படுத்துகிற எத்தனையோ இடையூறுகளை தள்ளி எறிஞ்சிட்டு, இந்த பூமியை கடந்து போகும் போது, நம்ம தேவன்கிட்ட, பரலோகத்தை சந்திக்க வைக்க முடியும். அடுத்து நம்ம இயேசப்பா தன்னை குறித்து சொல்லும் போது, சத்தியம்ன்னு சொல்லுவாங்க. இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும். நம்ம இயேசப்பாவே வார்த்தையா இருக்கும் போது, கொஞ்சம் கூட மாசோ, கறைகளோ இல்லாத அவருக்குள் எப்படி பொய்களோ, கபடமோ இருக்க முடியும் குட்டிகளா. ஏன்னா, எப்படி நம்ம இயேசப்பா நம்ம பிதாப்பா வுடைய பையன்ன்னு சொல்லி அவர் மேல வைக்கிற விசுவாசம், நம்மளை பரலோகத்தை நோக்கி அழைத்து சொல்லுதோ, அந்த அளவுக்கு உண்மை. நம்ம இயேசப்பா நமக்காக சிலுவையில அறையப்பட்டார் என்கிற சத்தியம். ஏன்னா நம்ம இயேசப்பா நமக்காக சிந்தின இரத்தம் மட்டுமே நம்மளை நம்ம பாவ வாழ்கையில இருந்து விடுதலை பண்ணுகிற ஆயுதம். வேறெந்த ஆயுதத்தாலும் நம்மளை நம்ம பாவங்களில் இருந்து விடுதலை பண்ண முடியாது குட்டிகளா. நம்ம சொந்த பலமோ இல்லை வேறெந்த உலக வியாக்கியானங்களோ நம்மளை நம்ம மன பாரத்தில இருந்தும் விடுதலை பண்ண முடியாது. நம்ம பாவ வாழ்கையில இருந்தும் விடுதலை பண்ண முடியாது.

    அதனாலத்தான் நம்ம இயேசப்பா சொல்லி இருப்பாங்க. சத்தியம் உங்களை விடுதலையாக்கும்ன்னு. அதாவது நம்ம இயேசப்பா எனக்காக இரத்தம் சிந்தினார், என்னுடைய பாவங்களை எல்லாம் அவர் சுமந்தார் என்கிற உண்மை நமக்கு புரியுறதால, நாம நம்ம குற்ற மனச்சாட்சியோட வாழாம, எஞ்சியுள்ள வாழ்கையை நிம்மதியா, சந்தோசமா, சமாதானமா அவருடைய அன்புக்குள் வாழ முடியுது. அவ்வளவு தூரமா ஒருத்தர் செய்கிற தப்பு, அவருடைய பாவங்கள் அவரை கஷ்டப்படுத்தும்ன்னு நீங்க கேட்கலாம் குட்டிகளா.

    கொஞ்சம் கூட தெரியாம, உணர்ச்சிகள் மத்தியில, கோபத்தின் மூர்க்கத்தில ஒருத்தரை கொலை செய்திட்டு, மரண தண்டனைக்காக காத்திட்டிருகிற கைதியை போய் கேளுங்க, குற்ற மனசாட்சியும், பாவத்தின் வேதனையும் எவ்வளவு கொடுமையா இருக்கும்னு? அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது குட்டிகளா. அது நம்மளை ரொம்பவே கருக்கிடும். இதை விட நரகத்தில போய் படுவாங்களே, அது இன்னும் மோசம் குட்டிகளா.

    ஏன் , கிறிஸ்தவர்கள் கூட தன்கிட்ட வர்ற பிரச்சனைக்கு பயந்துக்கிட்டு தற்கொலை விசயங்களை தேர்ந்தெடுக்கிறாங்க. ஆனா அவங்களுக்கு தெரியாது, தற்கொலை என்பது வேதனைகளின் முடிவு கிடையாது, அது ஒரு ஆரம்பம்ன்னு. ரொம்ப ஆச்சர்யமா பார்க்குறீங்க. ஏன் எங்களை, நரகத்தில பாடுகள் படுவோம், கஷ்டம் படுவோம் சொல்லித்தான பயமுறுத்துவீங்கன்னு யோசித்தா சாரி குட்டிகளா. உண்மையில நரகத்தில கொடுமைகள் உண்டு. அதுவும் நம்ம பூமியில நாம செய்த தீவினைகளுக்கு ஏற்ற மாதிரி உண்டு என்பது உண்மைதான். அதை விட முக்கியமான காரியம், நம்ம குற்ற மனசாட்சியும், தப்பை பண்ணிட்டு இங்க வந்து பாடுகள் படுறோமேன்னு நம்ம பாவங்களின் வேதனையும் தான் நம்மளை ரொம்பவே, அந்த நரகத்தின் வேதனைகளை காட்டிலும் காயப்படுத்தும். இந்த எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமான விஷயம் தெரியுமா குட்டிகளா, இந்த உலகத்தில நாம இருக்கும் போது, எத்தனை தூரம் தான் நம்ம இயேசப்பா நம்மளை உருக்கமா கூப்பிட்டாலும், நாளைக்கு பார்ப்போம்னு தொடர்ந்து போயிட்டிருந்தேமே, அந்த எண்ணங்கள் உங்களுக்கு கொடுக்கும் பாருங்க ஒரு வலி, அதை சொல்ல வார்த்தைகள் கிடையாது குட்டிகளா.  

    கொஞ்சம் சந்தேகமா பார்க்கிற மாதிரி தோணுது குட்டிகளா. உண்மை, இது நம்ம தேவனுடைய வார்த்தைகள் குட்டிகளா. நம்ம இயேசப்பா தன்னை சத்தியம்ன்னு சொல்லி இருக்கும் போது , அதில் எங்கே மனுசங்க கற்பனை வரப் போகுது? நாம தேவனுடைய முகத்தை தேடாம, அவர் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காம, அவரை அலட்சியம் பண்ணிட்டு போன ஒவ்வொரு நொடியும் நம்ம ஞாபகத்தில வந்து நம்மளை சித்திரவதைப் படுத்துமாம். எந்த அளவுக்கு ஞாபகம் வரும்னு நம்ம இயேசப்பா நமக்கு சொல்ல ஆசைபடுறாங்க. நாம எந்த நாள், எந்த வருஷம், எந்த மணியில நம்ம இயேசப்பா நம்மளை ஆவலா கூப்பிடும் போது மறுத்துட்டு போனோமே, அது ரொம்பவே துல்லியமா ஞாபகம் வருமாம். அது ஏதோ ஒரு நாளோ, ஒரு மாசமோ வந்திட்டு மறந்து போயிரும்ன்னு நீங்க யோசிக்க வேண்டாம் குட்டிகளா. அடிக்கடி அந்த எண்ணங்கள் வந்து உங்களை கஷ்டப்படுத்துமாம். சப்போஸ் நம்ம இயேசப்பா காலத்தில வாழ்ந்து அவரை ஏற்றுக் கொள்ளாம மரித்த நபர், இப்ப நரகத்தில இருந்தா, அவர் இந்த 2000 வருசங்களும், என் இயேசப்பா கூட்டத்தில இருக்கும் போது கூட பார்த்தேனே, அவர் சொன்ன வார்த்தைகள் கேட்டேனே, ஆனா மற்றவங்களுக்கு பயந்து கொண்டு அவரை ஏற்றுக் கொள்ளாமேயே செத்து போயிட்டேனேன்னு இப்பவும் புலம்பி கொண்டுதான் அந்த நரகத்தில வேதனைகள் படுவார். இப்ப புரியுதா நம்ம ஞாபக சக்திகள் எந்த அளவுக்கு நரகத்திலயும் இருக்கும்னு.

    நரகத்தின் வேதனைகள் எப்படி இருக்கும்னு நம்ம இயேசப்பா சொல்லி கொடுத்திருக்காங்க. அதை என்றும் உங்க ஞாபகத்தில இருந்து மறந்து போயிறாதீங்க. இப்ப புரியுதா நம்ம இயேசப்பா நம்மளை எப்படி சத்தியமா இருந்து நம்ம பாவ வாழ்கையில இருந்து விடுதலை பண்றாங்கன்னு. நம்ம இயேசப்பா நமக்கு தன்னை குறித்து சொன்ன காரியம்ன்னு அடுத்து சொல்லுறது, நானே ஜீவன். நம்ம இயேசப்பா இப்பவும் நமக்காக பரலோகத்தில காத்திட்டிருக்கிறார் என்பது தான் நம்ம வாழ்கையின் ஓட்டத்திற்கு ஆதாரம் குட்டிகள். இல்லைன்னா எதற்காக வாழுறோமேனே தெரியாட்டி, என்ன செய்ய குட்டிகளா. நாம ஒண்ணும் செய்யாம அப்படியே ஒரே இடத்தில உட்கார்ந்திருவோம். என் இயேசப்பா என் கூட இருக்காங்க. எனக்காக சாத்தானை ஜெயித்தவர், இப்பவும் என்னுடைய வருகைக்காக பிதாவின் வலது பாரிசத்தில் காத்திருக்கிறார் என்ற எண்ணம் மட்டுமே குட்டிகளா நம்மளை ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில இருந்து, அவரை பார்க்க ஓட வைச்சிட்டிருக்கு. நாமளும் நம்ம வீட்டுல இருக்கிற பொருள் மாதிரி ஒரே இடத்திலேயே இருந்தா, நம்மளை எல்லாரும் ஜீவன் இல்லாதவங்கன்னு சொல்லி முடிவு பண்ணிருவாங்க. நம்ம இயக்கமும், நம்ம வாழ்கையும் நம்ம இயேசப்பாவை நோக்கி மட்டுமே இருந்தா அது தான் ஜீவனுள்ள வாழ்க்கை. அந்த ஜீவன் நம்ம இயேசப்பாதான் குட்டிகளா. அவர் வார்த்தையா இருந்து, நம்மளை நடத்தி வருகிறார்.

    இதை நமக்கு புரிய வைக்க நம்ம இயேசப்பா ஒரு அழகான காரியத்தை சொல்ல ஆசைப்படுறாங்க. இந்த உலகத்தில எந்த ஒரு பிடிப்பும், அன்பும் இல்லாம வாழ்ந்த ஒரு மனிதனுக்கு தீடீர்னு ஒரு ஆபத்து நேரிட்டது, அவனை அவன் பக்கத்து வீட்டுகாரங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க. தனக்கு பின்னாட்களில் போலீஸ் பிரச்சனை வந்திர கூடாதுன்னு, அவனை காப்பாற்றும் எண்ணத்தில இல்லை. டாக்டர்ஸ் முடிவுக்கு வந்துட்டாங்க, இனி அவன் பிழைக்க மாட்டான்னு. தேவையில்லாம நம்ம பேர் கெட்டு போக கூடாதுன்னு நினைச்சவங்க, அவன் சாதாரண வார்டில் சேர்த்து, ஏனோ தானோன்னு ட்ரீட்மென்ட் பார்த்தாங்க. அவனுடைய பக்கத்து பெட்டில் இருந்து ஒரு சின்ன குழந்தை. அந்த குழந்தைக்கு நம்ம இயேசப்பான்னா உயிர். அதுனால அந்த குழந்தையும் தனக்கு உடம்பில என்ன கஷ்டம் இருந்தாலும் காலையிலும், இரவும் கண்டிப்பா பைபிள் வாசித்து விடுமாம். முதலில் ஏற்கனவே இந்த உலகத்தில மேல எல்லார் மேலயும் எரிச்சலில் இருந்தவனுக்கு, பைபிள் வாசிப்பும் தொல்லை மட்டும்தான் கொடுத்தது. ஆனா நாள் நாள் ஆக ஆக ஆவலா அவனும், அந்த குழந்தைக்கு தெரியாம கேட்க ஆரம்பிச்சானாம். அந்த குழந்தை உடம்பு சரியாகி போன அடுத்த நாள் அந்த மனிதன் இறந்து போயிட்டானாம். ஆனா அவன் குடியிருப்பு இப்ப பரலோகம்.

    என்ன குட்டிகளா, மனதில ரொம்பவே பாரத்தோட அந்த மனிதனை பற்றி கேட்டுட்டு இருந்தீங்க. அந்த மனிதன், அதாவது நம்ம பார்வையில பாவி, இப்ப பரலோகத்தில இருக்கிறதை நம்மளால் நம்ப முடியலை, அப்படித்தான குட்டிகளா. அந்த மனிதனை இந்த உலகமே உபயோக மில்லாதவன் நினைச்சிருந்தாலும், அவனை நம்ம இயேசப்பா பரலோகத்தை தழுவி கொண்டாங்களே. இது எப்படி சாத்தியம் , நம்ம மனதில நினைக்கலாம். ஆனா அந்த குழந்தை கொடுத்த பைபிள் வார்த்தைகள் தான் அவனுக்கு இந்த பூமியில ஜீவனை கொடுத்து, நித்திய ஜீவனையும் கொடுத்தது. இந்த பூமியில அவன் ஓட்டம் முடிந்திருந்தாலும், அவனை ஜீவனுடையவனாக மாற்றி, நம்ம இயேசப்பா வார்த்தைகள் பரலோகத்தில இடம் பிடிச்சி கொடுத்திட்டாரே!!!!! இப்ப நம்புறீங்களா குட்டிகளா. நம்ம இயேசப்பாதான் நமக்கு ஜீவன்னு.

    ஒரு முக்கியமான விசயத்தை மறந்திட்டோம் குட்டிகளா. உங்ககிட்ட நம்ம இயேசப்பா பரலோகம் தான் நம்முடைய வீடு. இந்த பூமி நம்மளை பரலோகத்தில சேர்றதுக்கு முன்னாடி பயற்றுவிக்கிற ஒரு சோதனை கூடம்னு சொன்னாங்க. அதை குறித்து உங்களுக்கு தெரிந்த காரியங்களை தெரிந்து கொள்ள அவர் ஆசைபடுகிறார். அதுனால உங்களுக்கு தெரிந்த காரியத்தை எங்களுக்கு தயவு செய்து எழுதி அனுப்புங்க, ப்ளீஸ்…………. 

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    1 + five =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>